சேலம், ஜூன். 8-சனி, ஞாயிறு விடுமுறையை பறித்திடும் அரசாணையை ரத்து செய்திடக்கோரி அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். 30 ஆண்டுகளாக பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். பொது மையங்கள் மற்றும் மினி மையங்களுக்கும் சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும். மத்திய அரசு அறிவித்த ஊதியத்தை நிலுவையுடன் வழங்க வேண்டும். சனி, ஞாயிறு விடுமுறையை பறித்திடும் அரசாணை எண் 73 ஐ ரத்து செய்திடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் ஆவேச மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சரோஜா தலைமை தாங்கினார். இதில் சேலம் கோட்டை மைதானத்திலிருந்து பேரணியாக புறப்பட்ட அங்கான்வாடி ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இம்மறியல் போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.செல்லசாமி துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், டி.உதயக்குமார், கே.சி.கோபிக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இந்த மறியல் போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.ரஹமத் பீபீ, தனக்கொடி, பிரேமா, பழனியம்மாள் உள்ளிட்ட ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதாகினர்.
ஈரோடு
ஈரோட்டில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.தனலட்சுமி தலைமை தாங்கினார். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையின் முன்பு துவங்கிய அங்கன்வாடி ஊழியர்களின் பேரணி, ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறைவடைந்து மறியல் நடைபெற்றது. இம்மறியல் போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்ரமணியன், பொருளாளர் ஆர்.ரகுராமன், பி.மாரிமுத்து, அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.ராஜ்குமார், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் கே.கஸ்தூரி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இந்த மறியல் போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எம்.உமாமகேஸ்வரி உள்ளிட்ட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கைதாகினர்.
கோவை
கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் எதிரில் வெள்ளியன்று நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.பி. தனலட்சுமி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சந்திரன், மாவட்டச் செயலாளர் எஸ்.மதன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். ஆறுமுகம் சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம். இன்னாசிமுத்து உள்ளிட்ட தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.பின்னர் சாலை மறியலில் ஈடுபட முயன்ற அங்கன் வாடி ஊழியர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். அப்போது சங்க நிர்வாகிகளுக்கும் போலீசாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இம்மறியல் போராட்டத்தில் இச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சாந்தகுமாரி, பொருளாளர் புனிதவதி, முன்னாள் மாநில நிர்வாகி ராஜேஸ்வரி முருகேசன் உட்பட 150 பேர் பங்கேற்று கைதாயினர்.
திருப்பூர்
திருப்பூரில் பழைய பேருந்து நிலையம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.பாக்கியம் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் சுந்தராம்பாள் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து 350 பெண் ஊழியர்கள் சீருடையுடன் பங்கேற்று கோபாவேச முழக்கங்கள் எழுப்பினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், மாவட்டப் பொருளாளர் டி.குமார், மாவட்டத் துணைச் செயலாளர் பி.முருகேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் து.ராஜகோபாலன், மாவட்டச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் மறியலில் பங்கேற்ற அங்கன்வாடி ஊழியர்களை வாழ்த்தி முழக்கமிட்டனர்.மறியல் போராட்டம் தொடங்கியவுடன் போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: