கோவை, ஜூன்.8-கோவையை அடுத்துள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் வங்கிக்கு பணம் கொண்டு சென்ற பெட்ரோல் பங்க் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்தை கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ளது மத்தம்பாளையம் கோட்டைப் பிரிவு. இப்பகுதியில் ஹரி ஜனனி என்ற பெயரில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு எழுத்தராக பணியாற்றி வருபவர் பழனிசாமி (வயது 58). இவர் பெட்ரோல் பங்க்கில் வசூலான தொகையான ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை வெள்ளியன்று காலை எடுத்துக்கொண்டு காரமடையில் உள்ள ஐஓபி வங்கியில் செலுத்துவதற்கான இருசக்கர வாகனத்தில் கிளம்பி சென்றுள்ளார்.
அப்போது, பெட்ரோல் பங்கிலிருந்து சில மீட்டர் தூரத்திற்கு சென்றபோது கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வெள்ளை நிற மாருதி கார் இருசக்கர வாகனத்தை வழிமறித்து நிறுத்தி உள்ளது. இதன்பின், காரிலிருந்து இறங்கிய நான்கு பேர் பெட்ரோல் பங்க் ஊழியர் பழனிசாமியின் முகத்தின் மீது மிளகாய் பெடியை தூவி பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பணப்பையை பறிக்கவிடாமல் கொள்ளையர்களுடன் போராடி உள்ளார். இதனிடையே, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில்கூடி கற்களை கொண்டு கொள்ளையர்களை தாக்கி உள்ளனர். இந்நிலையில் யாரும் எதிர்பாரத நேரத்தில் கொள்ளையர்கள் தங்களிடமிருந்து துப்பாக்கியை எடுத்து பெட்ரோல் பங்க்கின் ஊழியர்களில் பழனிசாமி மற்றும் பொதுமக்களை நோக்கி சுட்டுள்ளனர். இதில் பெட்ரோல் பங்க் ஊழியர் பழனிசாமியின் தொடையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் சாய்ந்தார். இதன்பின்னரும் பணத்தை பறிக்க கொள்ளையர்கள் முயல, பழனிசாமியின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அதை பறிக்க முடியவில்லை. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் கற்களை கொண்டு கொள்ளையர்கள் மற்றும் அவர்களின் காரின் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். காரின் கண்ணாடிகள் உடைந்து முழுக்க சேதமடைந்தன. இதில் நிலைகுலைந்த கொள்ளையர்கள் அக்காரில் ஏறி சம்பவ இடத்திலிருந்து தப்பித்து சென்றனர்.இதுகுறித்து அப்பகுதியினர் பெரியநாயக்கன் பாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதன்பின் கோவை சரக டிஐஜி, எஸ்பி உமா தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் எண்ணை பொதுமக்கள் குறித்து வைத்து காவலர்களிடம் தெரிவித்தனர். உடனே, காவல்துறையினர் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டனர். ஆனால், கொள்ளையர்களே அல்லது அவர்கள் பயன்படுத்திய வாகனமோ சோதனையில் சிக்கவில்லை. எனவே, இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply