ஒரு அறை, இரண்டு ஆசிரியர்கள், ஆறு வகுப்புகள், பாதுகாப்பற்ற திறந்தவெளிக் கழிப்பிடம், இதுதான் காஷ்மீரின் ஆரம்ப நிலைப் பள்ளிக்கூடங்களின் நிலை.இந்தியாவின் தலைப்பகுதியில் அமைந்திருந்தாலும் அதன் கல்வி நிலையோடு ஒப்பிடுகையில் காஷ்மீர், பள்ளத்தாக்கு எனும் பெயருக்கு ஏற்றாற்போல் அதல பாதாளத்தில் தான் உள்ளது. இம்மாநிலத்தில் உள்ள ஆரம்ப கல்வி நிலையங்கள் மிகவும் மோசமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. குழந்தைகளுக்கு கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆரம்ப கல்வி நிலையங்களே எவ்வித அடிப்படை வசதியுமின்றி இருப்பது வேதனைக்குரியது.காஷ்மீர் மாநிலத்திலுள்ள பத்து மாவட்டங்களில் மொத்தம் 10,921 ஆரம்ப கல்வி நிலையங்கள் இருக்கின்றன. இவையனைத்தும் ஐந்தாயிரம் கிராமங்களைத் தாண்டி பரந்து விரிந்துள்ளது. இவற்றில் 4,088 பள்ளிகள் வாடகைக் கட்டிடங்களிலும், 6,155 பள்ளிகள் அரசு கட்டிடங்களிலும் இயங்கி வருகின்றன.
மேலும், 678 பள்ளிகள் கட்டுமானப் பணியியில் உள்ளது. இப்பள்ளிகள் அனைத்தும் எவ்வித பாதிப்புமின்றி நல்லநிலையில் உள்ளதாக காஷ்மீர் மாநில சர்வ ஷிக்ச அபியான் திட்ட இயக்குனரகம் தெரிவிக்கிறது.உண்மையில் இப்பள்ளிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் தெற்குப் பகுதியில் உள்ள அனன்டாங் மாவட்டத்தின் ஹசன்போரா கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரே ஒரு அறைதான் உள்ளது. இந்த அறையில் மொத்தம் ஆறு வகுப்புகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்திற்கும் சேர்த்து இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே என்ற மோசமான நிலை உள்ளது.எங்களது பள்ளி மிகவும் மோசமான நிலையில் பாழடைந்து கிடக்கிறது. வேறுவழியின்றி, இங்கேயே குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகிறோம். அரசோ, எங்களையே பள்ளி கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்யச் சொல்கிறது. நாங்கள் என்ன செய்வது? இது அரசின் வேலை என்று நொந்து கூறுகிறார் ஹசன்போரா கிராம பள்ளி ஆசிரியர்களில் ஒருவரான அலி முகமது தர்.இது இவ்வாறிருக்க, அக்கிராமத்திற்கு அருகிலிருக்கும் மற்றொரு கிராமமான ஹபிஜாபாத்தில் உள்ள பள்ளியின் நிலையோ இன்னும் மோசமாக உள்ளது. இங்கு எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தப்படுகிறது. இப்பள்ளியில் மொத்தம் மூன்று அறைகள் உள்ளன. அவையனைத்தும் மிகவும் சிதிலமடைந்து விழும் நிலையில் உள்ளது. சில நேரம், இரண்டிற்கும் மேற்பட்ட வகுப்பு மாணவர்கள் ஓரே அறையில் அமர்ந்து பாடம் படிக்கின்றனர். இதனால், அவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க முடியாத சூழ்நிலை உள்ளது .காஷ்மீரில்உள்ளஆரம்பப்பள்ளிகளில்மிகவும்முக்கியபிரச்சனையாக கருதப்படுவது கட்டிடங்கள்தான். பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ள தால், மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்கள் மிகவும் அச்சத்துடனேயே பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
ஆனால், அரசு அதிகாரிகளோ இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதேயில்லை. மேலும், இப்பள்ளிகளில் 40 சதவிகித அளவிற்கான பள்ளிகள் வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வந்தாலும், அனைத்து பள்ளிகளும் மிக வும்மோசமானகட்டிடங்களிலேயே இயங்கி வருகின்றன. இக்கட்டிடங் களில் இருக்கைகள், மேஜைகள் போன்ற வசதிகள் இன்றி, மாண வர்கள் அனைவரும் மண்தரையி லேயே அமர்ந்து கல்வி கற்கின்றனர் என அக்கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கழிப்பிட வசதி!
மனிதர்களுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவையாகத் திகழ்வது கழிப்பிடம். ஆனால், இங்கு பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பிடங்களே இல்லை. ஆனால், சர்வ ஷிக்சா அபியான் இயக்குனரக அதிகாரிகளோ இப்பள்ளிகளில் போதுமான அளவு கழிப்பிட வசதிகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். உண்மையில், இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மலம், ஜலம் கழிக்க திறந்த வெளியையே பயன்படுத்தும் அவல நிலையே உள்ளது. இதனால், பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும், சுத்தம் செய்வதற்கான வசதியும் இப்பள்ளிகளில் இல்லை. சுத்தத்தின் அவசியத்தை அறிமுகப்படுத்தும் இடத்திலே அதற்கான வசதிகள் இல்லாதது பெரும் வேதனையாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொறுப்பற்ற நிர்வாகம்!
இப்பள்ளிகளில் போதுமான ஊழியர்கள் இல்லாததால் பள்ளிகளில் பயிலும் மாணவர்களே, பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். பள்ளி துவங்கும் நேரத்தில் தரைவிரிப்புகளை விரிப்பது, மாலையில் பள்ளி முடிந்த பின் அவற்றை சுருட்டி வைப்பது உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை செய்வதற்குப் பயன்படும் பாத்திரங்களை மாணவர்களே கழுவி வைக்கும் அவல நிலை உள்ளது. இதனை தட்டிக் கேட்க வேண்டிய ஆசிரியர்கள் இதனை கண்டுகொள்ளாமல் செல்கின்றனர்.குழந்தைகளை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். ஆனால், இங்கு கல்வி என்ற பெயரில் பள்ளியை சுத்தம் செய்வது, பாத்திரங்களை கழுவுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் மாணவர்களையே செய்யச் சொல்கின்றனர். இதனை அறிந்தும் அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுகுறித்து, ஹபிஜாபாத் கிராமத்தின் தலைவர் முகமது யூசுப் லங்கூ தெரிவிக்கையில், காஷ்மீர் கிராமங்களில் உள்ள பெரும்பாலான ஆரம்பப் பள்ளிகளில் தலைமையாசிரியர்களே இல்லை. இதனை சீர்செய்ய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. இதனால் தான், பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முக்கியத்துவம் கொடுக்காமல், தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர் என்றார்.
பள்ளி செல்லாக் குழந்தைகள்!
இந்தியாவில் அனைத்து குழந்தைகளும் அடிப்படைக் கல்வியைக் கற்றுக் கொள்ளும் வகையில் அனைவருக்கும் கல்வி எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், காஷ்மீர் வட்டத்தில், ஆறிலிருந்து பதினான்கு வயது வரையுள்ள குழந்தைகளில் 22,426 பேர் பள்ளி செல்வதில்லை என இத்திட்டத்திற்கான மாநில திட்ட இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதேபோல், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வியை உறுதிப்படுத்துவதற்கான சட்டத்தை அரசு இயற்றியிருந்தாலும், அதனை முழுவதுமாக அமல்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. ஏனெனில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பான முறையில் கல்வி அளிக்க தனியாக ஆசிரியர்கள் எவரும் இல்லை. மேலும், பள்ளிகளில் அவர்களுக்கான நடைபாதை, இருக்கை போன்ற எவ்வித வசதிகளும் வழங்கப்படுவதில்லை.மேலும், அவர்களுக்கு சிறப்பான கல்வியை அளிக்கும் வகையிலும் எவ்வித நவீன தொழில்நுட்பங்களும் அரசுப் பள்ளிகளில் இல்லை. இதன்காரணமாக, பெரும்பாலான மாற்றுத்திறனாளிக் குழந்தைகள், பள்ளிக்குச் செல்வதில்லை அல்லது பள்ளியிலிருந்து இடையிலேயே நின்று விடுகின்றனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி, காஷ்மீரில் 6 வயதிலிருந்து 14 வயதுடையவர்களில் 2 சதவிகிதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இது பதினான்கு வயதிற்கு மேற்பட்டோரில் 8 சதவிகிதமாக உள்ளது. அனைவரும் அடிப்படைக் கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதனை கிராம மக்கள் எட்டிப்பிடிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.