பாங்காக்கில் நடைபெறும் தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பேட்மிண்டன் போட்டிகளில் இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.கடைசி 16 சுற்றில் சாய்னா 21-17, 21-13 என்ற ஆட்டப்புள்ளிகளில் சீனவீராங்கனை லி ஹான் என்பவரை 42 நிமிடங்களில் தோற்கடித்தார். முதல் ஆட்டத்தில் சாய்னாவின் ஆட்டத்தில் சூடுபிடிக்க தாமதம் ஆனது. அதனால் பல தடவை லி ஹான் முன்னிலை பெற்றுவந்தார். சாய்னா அவரை விரட்டிச் சென்று 12-12 என்றும், 17-17 என்றும் சமன் செய்தார். அதற்குப்பின் அவர் நான்கு புள்ளிகளை தொடர்ந்து எடுத்து முதல் ஆட்டத்தை வென்றார்.இரண்டாவது ஆட்டத்தின் தொடக்கத்தில் லி ஹான் கடுமையாகப் போராடினார். ஆனால் 7-7 என்ற சமநிலைக்குப்பின் சாய்னா இடைவெளியை அதிகப்படுத்தி முன்னேறி வென்றார்.மற்றொரு இந்திய மகளிர் ஆட்டக்காரர் பி.வி.சிந்து 12-21, 23-25 என்ற புள்ளிகளில் முன்னாள் உலகச்சாம்பியன் வாங் லின் என்பவரிடம் தோற்றார்.ஆடவரில் 12ம் நிலை பெற்ற சௌரவ் வர்மா முதல் ஆட்டத்தை இழந்தபின்பு அடுத்த இரண்டு ஆட்டங்களையும் கைப்பற்றி வென்றார். அவர் 7ம் நிலை பெற்ற இந்தோனேசிய வீரர் ஆலம்சியா யூனுசை 18-21, 21-13, 22-20 என வென்றார். மலேசியாவின் டெக் ஸி சூ என்பவரை சமீர் வர்மா 21-18, 21-18 எனத் தோற்கடித்தார். மற்றொரு மலேசிய வீரர் சூங் ஹான் வோங்கை சாய் பிரநீத் 13-21, 21-18, 22-20 என வென்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.