திருப்பூர், ஜூன் 6-‘ராகிங்’ மற்றும் பெண்களை கேலி செய்தல் (ஈவ்டீசிங்) போன்ற குற்றங்களை தடுக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் ராகிங் மற்றும் ஈவ்டீசிங் தடுப்புப் பிரிவு 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:திருப்பூர் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் ‘ராகிங்’ மற்றும் பெண்களை கேலி செய்தல் (ஈவ்டீசிங்) போன்ற குற்றங்களில் ஈடுபட்டு தங்கள் எதிர்காலத்தை கெடுத்து கொள்ள வேண்டாம். இக்குற்றம் புரியும் மாணவர்கள் மீது சட்டபடி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஓவ்வொரு கல்லூரி நிர்வாகமும் தங்கள் கல்லுரிகளில் ராகிங் த டுப்புக் குழு (ஆன்டி ராகிங் டீம்) அமைத்து குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழுவின் விபரத்தை தங்களது சரக காவல் நிலையங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.மேலும் ‘ராகிங்’ மற்றும் பெண்களை கேலி செய்தல் (ஈவ்டீசிங்) போன்ற குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் ராகிங் மற்றும் ஈவ்டீசிங் தடுப்புப் பிரிவு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
எனவே மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி தங்களை யாரேனும் ராகிங் செய்தாலோ, பெண்களை கேலி செய்தாலோ கீழ்கண்ட வலை தளத்திலும், மின் அஞ்சல் மூலமாகவும் மற்றும் செல்போன் எண்ணுக்கும் தகவல் கொடுக்கலாம். தகவல் கொடுப்பவரின் தொலைபேசி, செல்போன் எண், பெயர் மற்றும் விலாசம் ஆகியவை ரகசியமாக வைக்கப்படும்.www.tnpolice.gov.in என்ற இன்டர்நெட் முகவரியிலும், ragging
complaints@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரியிலும், ராகிங், ஈவ்டீசிங் தடுப்புப்பிரிவு செல்போன் எண் 94881 92350 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அஸ்ரா கார்க் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.