கோவை, ஜூன். 7-பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் பாரபட்ச போக்கை கண்டித்து அனைத்து ஊழியர்கள் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. நிதி நிலைமையை காரணம் காட்டி பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு போனஸ், மெடிக்கல் அலவன்ஸ், பயணப்படி, பஞ்சப்படி மற்றும் விடுப்புபடி உள்ளிட்டவைகள் நிர்வாகத்தால் மறுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் பிஎஸ்என்எல் ஐடிஎஸ் அதிகாரிகளுக்கு உயர் பயணப்படி, குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, வெளிநாடு செல்வதற்கான பயணப்படி உள்ளிட்ட 15 வகையான படிகளை வழங்கியுள்ளது. நிர்வாகத்தின் இப்பாரபட்ச போக்கினைக் கண்டித்தும், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய படிகளை வழங்க வலியுறுத்தியும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் முதன்மை தொலைப்பேசி நிலையம் முன்பு புதனன்று அனைத்து ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழுவின் தலைவர் ராபர்ட் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர்கள் வி.சுப்ரமணி, பிரசன்ன ஆகியோர் தர்ணா போராட்டத்தை துவக்கி உரையாற்றினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் கே.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், என்எப்டிஇ அகில இந்திய நிர்வாகி எஸ்.எஸ்.கோபாலகிருஷ்ணன், எல்.சுப்பராயன், டெப்பு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தராஜ், சேவா பிஎஸ்என்எல் மாவட்டத் தலைவர் பழனிச்சாமி, சிவராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த தர்ணா போராட்டத்தில் 100 பெண்கள் உட்பட மூந்நூற்றுக்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி
பிஎஸ்என்எல் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பொள்ளாச்சியில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு கூட்டமைப்பின் செயலாளர் சுப்ரமணியம் தலைமை தாங்கினார். இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரசேகரன், தங்கமணி, பிரபாகரன், ராஜசேகரன், என்எப்டிஇ மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், தனுஷ்கோடி, எஸ்என்இஏ வி.சந்திரசேகரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு சங்கத்தின் நிர்வாகி ஆர்.சேதுராமன் தர்ணா போராட்டத்தை வாழ்த்தி பேசினார். இதில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் திரளாக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
குன்னூர்
குன்னூரில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு ஆர்.ரவிகுமார், பாலசுப்ரமணி ஆகியோர் தலைமை தாங்கினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேந்திரன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினர். தர்ணா போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி அதிகாரிகள் சங்க பொறுப்பாளர் முத்தையா சீனிவாசன் கோகுலத், வெங்கடசலபதி குரு, ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் மாயகிருஷ்ணன், பொ.இராமன்குட்டி, வினோத் ஆகியோர் உரையாற்றினர். இதில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் என்.பி.ராஜேந்திரன், ஆர்.ஆர்.மணி, என்எப்டிஇ சங்கத்தின் பாண்டுரங்கன், ஸ்ரீதர், எஸ்என்இஏ சங்கத்தின் மனோகரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
உடுமலை
உடுமலையில் நடைபெற்ற தர்ணாவில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சக்திவேல், என்எப்டிஇ மருதாசலம், எஸ்என்இஏ லியாகத் அலி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.