கோவை, ஜூன் 7-திருப்பூர் பாசி நிதி நிறுவனத்தின் ரூ. 870 கோடி மோசடி வழக்கில் தொடர்புடைய நிதி நிறுவன இயக்குநர் மூவர் மீது வியாழனன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.பாசி போரக்ஸ் என்ற நிதி நிறுவனம் திருப்பூரில் இயங்கி வந்தது. இந்நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நிறுவனத்தின் இயக்குநர் மூவரை டார்ஜிலிங் வைத்து கைது செய்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது, இந்திய காவல் சட்டம் 120 (கூட்டுச்சதி), 420 (மோசடி), 4 (பரிசு சீட்டு மற்றும் சுழற்சி தடை சட்டம்), 5 (முதலீட்டாளர் நலன் பாதுகாப்புச் சட்டம்) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கில் ஐ.ஜி. பிரமோத் குமாருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்ததையடுத்து, பிரமோத் குமாரை சிபிஐ போலீசார் கைது செய்தனர். அவரை, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே கோவை மத்திய சிறையில் தனது உயிருக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி அவரை, சென்னை புழல் சிறைக்கு மாற்றி உத்தரவிட்டார். தற்போது, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாசி நிதி நிறுவன அதிபர்களான கதிரவன், மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளி ஆகியோர் மீது கடந்த மே 10ம் தேதி 14 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், முதலீட்டாளர்கள், போலீஸ் அதிகாரிகள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் உள்பட 1432 பேரை சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், இவ்வழக்கு நேற்று (ஜூன் 4) விசாரணைக்கு வந்தது. அவர்கள் அனைவரும் பலத்த போலீஸ் பாதுகாப்போடு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, நீதிபதி சீனிவாசன் முன்னிலையில், அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், விசாரணை மேற்கொண்ட நீதிபதி, ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெறாமல், பொதுமக்களிடமிருந்து டெபாசிட் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாக உங்கள் மீது கூறப்படும் குற்றச்சாடு உண்மையா ? என்று கேட்டார். இதற்கு, அவர்கள் மூன்று பேரும், இது பொய் வழக்கு என்றனர்.இதனையடுத்து அவர்கள் மூவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. மேலும் சாட்சியங்கள் மீதான விசாரணை வரும் 19ம் தேதி முதல் துவங்கும் என்று நீதிபதி அறிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: