இந்திய கடற்படைக்கு ஆட்கள் தேர்வு திருப்பூர், ஜூன் 7-இந்திய கடற்படைக்கு எதிர்வரும் செப்டம்பர்-அக்டோபர் 2012-ல் ஆட்தேர்வு நடைபெறுகிறது. இதில் 01.02.1992 முதல் 31.01.1996ம் தேதிக்குள் பிறந்த திருமணமாகாத இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் 10,+2 கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் வேதியல், உயிரியல், கம்யூட்டர் சயின்ஸ் இவற்றுள் ஏதேனும் ஓன்றுடன் தேர்வாகியிருக்க வேண்டும்.மேலும் இது குறித்த விரிவான தகவல்களை www.nausena-bharti.nic.in என்ற இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க மேற்காணும் இணைய தளத்தில் நேரடியாகவும், அல்லது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். ஆனால் இவற்றில் ஏதேனும் ஒன்றில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டிலும் விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 22.06.2012-க்குள் உறையின் மீது “on line SSR Application -01/2013 batch & 10+2 percentage ___ “ என்று எழுதி POST BOX NO .488, GOHA DAK KHANA, GPO, NEW DELHI – 110001என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.மேலும் 011-23793067 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இந்த வாய்ப்பினை கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் லெப்.கர்னல் ச.சாரதா(ஓய்வு) தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி இயங்கிய9 சாயப் பட்டறைகள் இடிப்புஅதிகாரிகள் நடவடிக்கை
ஈரோடு, ஜுன் 7-ஈரோட்டில் அனுமதியின்றி இயங்கிய 9 சாயப்பட்டறைகள் மற்றும் சலவை பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடித்து பொக்லைன் எந்திர உதவியுடன் அகற்றினர்.ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதியில் நீர் நிலைகளை மாசுபடுத்தும் சாயப்பட்டறைகள் மற்றும் அனுமதியின்றி செயல்படும் சாய மற்றும் சலவைபட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி அதிகாரிகள் ஈரோடு நீர் நிலை பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அனுமதியின்றி மாணிக்கம்பாளையம், பனங்காட்டு தோட்டம் ஆகிய பகுதியில் அனுமதியின்றி சாயம் மற்றும் பிளீச்சிங் (சலவை) பட்டறைகள் செயல்படுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பறக்கும் படை பொறியாளர், மின்சார வாரியத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சோதனை மேற்கொண்டனர். இதில் அனுமதியின்றி 6 சாயப்பட்டறைகளும், 3 பிளீச்சிங் பட்டறைகளும் செயல்படுவது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மின் இணைப்கள் துண்டிக்கப்பட்டது. பின்னர் அந்த பட்டறைகளின் கூரைகளையும், இயந்திரங்களையும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள்.

ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை-கோட்ட மேலாளர்
சேலம்,ஜூன் 7-ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கோட்ட மேலாளர் சுஜாதா ஜெயராஜ் தெரிவித்தார்.சேலத்தில் ரயில் பயணிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ரயில் பெட்டிகளில் மூட்டை பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து கோட்ட மேலாளர் சுஜாதா ஜெயராஜ் பேசியதாவது: மூட்டை பூச்சிகளின் தொல்லையை ஒழிக்க ஒவ்வொரு பெட்டியிலும் மருந்து தெளிக்கப்படும். பயணிகள் தடையின்றி ஏறி இறங்க புதிய நடை மேம்பாலங்கள் ரயில் நிலையங்களில் கட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. அனைத்து ரயில் நிலையங்களிலும் இடவசதி பற்றி எலக்ட்ரானிக்ஸ் போர்டு வைக்கப்படும் என்று தெரிவித்தார்.கூட்டத்தில் கூடுதல் கோட்ட மேலாளர் காளிமுத்து, சீனியர் கோட்ட வர்த்தக மேலாளர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டெங்கு காய்ச்சல் இல்லைமாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
குன்னூர், ஜூன் 7-நீலகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து அறிகுறி இல்லை. எனினும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கையாக சுகாதார துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான பல்வேறு பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தெரிவிக்கையில்:நீலகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து அறிகுறி தென்படவில்லை. மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தயாரான நிலையில் உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் தொட்டிகள் முழுமையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் மூலம் காய்ச்சல் பரவாமல் இருக்கும் வகையில் சுகாதார துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: