திருப்பூர், ஜூன் 7-திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்தில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தியதாக ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மிரட்டி காரியம் சாதிக்கலாம் என செயல்படும் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் கோபாவேசமாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.கொச்சி – பெங்களூர் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்துக்கு பல்வேறு பகுதிகளில் விவசாயிகளிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எனினும் அதைப் புறக்கணித்துவிட்டு இத்திட்டத்தை நிறைவேற்றிட மத்திய அரசின் கெயில் நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஊத்துக்குளி ஒன்றியத்தில் முல்லைநாயக்கனூர் என்ற கிராமத்தில் எரிவாயு குழாய் பதிப்பதற்கு நில அளவைப் பணிகளை இந்நிறுவன அதிகாரிகள் ஏற்கனவே முடித்துவிட்டனர்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எரிவாயுவை கொண்டு செல்லும் குழாய்களை லாரியில் கொண்டு வந்து அங்கு இறக்கியுள்ளனர். எனினும் இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை அறிந்த கிராம மக்கள் அப்போதே இப்பணியை செயல்படுத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் இப்பணி கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில் புதனன்று கெயில் அதிகாரிகள் கிராம மக்களைத் தொடர்பு கொண்டு வியாழக்கிழமை எரிவாயு குழாய் அமைக்கும் பணி நடைபெறும். யாராவது தடுத்து நிறுத்தினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளனர். கெயில் அதிகாரிகள் சொன்னது போல, வியாழனன்று காலை காவல் துறை பாதுகாப்புடன் அந்த கிராமத்தில் விவசாய நிலத்தில் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு வந்து பணியைத்தொடங்கியுள்ளனர். இதற்கு விவசாயிகளிடம் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எரிவாயு குழாய் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அந்த இடத்தில் முற்றுகையிட்டனர். உடனடியாக காவல் துறையினர் அங்கிருந்த விவசாயிகள் ஏழு பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இவர்கள் ஊத்துக்குளி ஒன்றியத்திற்குட்பட்ட மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டனர்.விவசாயிகள் எதிர்ப்பை மீறி எரிவாயு குழாய் பதிக்கும் பணியை செய்யத் துணிந்ததுடன், அந்த விவசாயிகளையே மிரட்டிப் பணிய வகைக்கும் விதத்தில் கைது நடவடிக்கையை அராஜகமாக மேற்கொண்டதால் கிராம மக்களிடம் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. கோபாவேசத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கெயில் நிறுவன அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அவர்களை மேற்கொண்டு பணியை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர்.இது பற்றி தகவல் அறிந்து அவிநாசி வட்டாட்சியர் பூங்காவனம் அங்கு வந்தார்.
ஊத்துக்குளி காவலர்களும் அங்கு இருந்தனர். விவசாயிகளுடன் அவிநாசி வட்டாட்சியர் மற்றும் கெயில் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பாக இத்திட்டத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. எனவே நிவாரணத் தொகை கிடைப்பது நிச்சயம் என்று அதிகாரிகள் வாதிட்டனர். ஆனால் இத்திட்டத்திற்கு நிவாரணம் கிடைப்பது மட்டும் பிரச்சனையல்ல. அடிப்படையிலேயே விவசாயத்துக்கு எதிரான இத்திட்டத்தை எதிர்ப்பதாக அப்பகுதி மக்கள் வாதிட்டனர்.தங்களுக்கு இருக்கும் வாழ்வாதாரத்தை இழக்க முடியாது. வேண்டுமானால் கைது செய்யுங்கள், தடியடி நடத்தினாலும் அதையும் சந்திக்கத் தயார், உயிரே போனாலும் நிலத்தை இழக்க மாட்டோம் என்று விவசாயிகளும், விவசாயிகள் பிரதிநிதிகளும் அதிகாரிகளிடம் உறுதிபடக் கூறிவிட்டனர். காலை சுமார் 11 மணியில் இருந்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தும் பல மணி நேரமாக இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவில்லை. கிராம மக்களின் உறுதியான எதிர்ப்பு காரணமாக திட்டப் பணி நிறுத்தப்பட்டது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகியோருடன் பேசி உரிய முடிவு காணலாம் என்று கிராம மக்கள் கூறிவிட்டனர். இதையடுத்து எரிவாயு குழாய் அமைக்கும் பணியை அரைகுறையாக தொடங்கிய நிலையில் அப்படியே விட்டுவிட்டனர். வெள்ளியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் இந்த பிரச்சனையை எழுப்பவும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் முடிவு செய்துள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகளின் இப்பிரச்சனை வெடித்துக் கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.