ஈரோடு, ஜூன் 7-ஈரோடு மாவட்டத்தில் ரேசன் கடைகளில் உள்ள குறைகள் தொடர்பான குறைதீர் கூட்டம் இன்று நடைபெறுகிறது.பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேசன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்குவது, ரேசன் கார்டு பெறுவது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து உயர்நிலை அலுவலர்கள், பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்க உள்ளனர். இதற்கான குறைதீர் கூட்டம் அனைத்து தாலுகாவிலும் ஜூன்-8ம் தேதி (இன்று) காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. மேலும் ஈரோடு தாலுகாவில் ஈஞ்சம்பள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில், ஈரோடு ஆர்.டி.ஓ., சுகுமார் தலைமையில் கூட்டம் நடக்கிறது. பெருந்துறை தாலுகாவில், வடமுகம் வெள்ளோடு பஞ்சாயத்து அலுவலகத்தில், ஈரோடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், பவானி தாலுகா, மாணிக்கம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலும், கோபி தாலுகா உடையாக்கவுண்டன்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கோபி ஆர்.டி.ஓ., பழனிசாமி தலைமையிலும், சத்தியமங்கலம் தாலுகா, செண்பகபுதூர் பஞ்சாயத்து அலுவலகத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. அந்தந்த பகுதியில் நடக்கும் கூட்டத்தில் அப்பகுதிக்கான வட்ட வழங்கல் அலுவலர், தனி தாசில்தார் (குடிமைப்பொருள் வழங்கல்), கூட்டுறவு சங்கங்களின் சார் பதிவாளர், கூட்டுறவு சங்க செயலாளர், பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்கள், சம்மந்தப்பட்ட ரேசன் கடை பணியாளர், வி.ஏ.ஓ., ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் ரேசன் கடையில் உணவுப்பொருள் பெறுவதில் உள்ள சிக்கல் மற்றும் ரேசன் கார்டு கிடைப்பதில் உள்ள பிரச்சனைகள் குறித்து மனுவாக தெரிவிக்கலாம்.

Leave A Reply

%d bloggers like this: