தமிழ் சினிமாவல் ஒரு மாறாத வழக்கம். ஒரு நடிகரோ, நடிகையோ அறிமுகமாகும்போது, ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பேர் வாங்கி விட்டால் தொடர்ந்து அவருக்கு அம்மாதிரி வேடங்களையே கொடுப்பார்கள்.இளம் வயதிலேயே அப்பா வேடத்தில் அறிமுகமாகி, கடைசிகாலம் வரை அப்பா என்னும் வயதானவேடங்களிலேயே நடித்து மறைந்த நடிகர் மேஜர் சுந்தரராஜன், அப்பா வேடத்தால் அவர் பட்ட அவஸ்தைகளை 1967ல் சொல்லி இருக்கிறார்.“சென்னையில் டெலிபோன் இலாகாவில் பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கு 1958 மே 28ஆம் நாள் மதுரையில் திருமணம் நடந்தது. விடுமுறை அதிகம் எடுக்க முடியாத காரணத்தால், மறுநாளே சென்னை திரும்பிவிட்டேன். என் திருமணத்திற்கு பின்னர்தான் நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். நான்கைந்து வருஷத்துக்கு பிறகு நான் மதுரைக்குப் போனபோது, என் மனைவி என்னை கட்டாயப்படுத்தி அங்குள்ள அவளுடைய எல்லா உறவினர் வீடுகளுக்கும் என்னை அழைத்துப்போய், ஒவ்வொருவரிடமும் என்னை நேரடியாக அறிமுகம் செய்து வைத்தாள். “இவர்தான் என் கணவர்” என்று.
இந்த அறிமுகம் ஏன் என்று எனக்கு புரியவில்லை. வீடு திரும்பிய பிறகுதான் காரணம் தெரிந்தது. அப்பா வேடம் ஏற்று படங்களில் நடித்து வந்த என்னை உண்மையிலேயே வயதானவன் என்றும், ஒருவேளை என் மனைவி எனக்கு இரண்டாம் தாரமாக இருக்கலாம் என்றும் அவர்களில் பலர் சந்தேகப்பட்டார்களாம்! அதனால் “நான் உண்மையிலேயே வயோதிகனல்ல, இளைஞன் தான்!” என்பதை எல்லாருக்கும் நிரூபிப்பதற்கே என்னை நேரில் அழைத்துச் சென்று என் மனைவி காட்டி இருக்கிறாள். பார்த்தீர்களா… அப்பா வேடம் போடுவதில் இருக்கும் கஷ்டங்களை!நான் அப்பா வேடம் ஏற்க வேண்டிய நிலைக்கு காரணம், ‘சர்வர் சுந்தரம்’ நாடகம் படமாக்கப்பட்டபோது கதாநாயகியின் தந்தை பாத்திரத்தை (நாடகத்தில் நான் நடித்தது) ஏற்று நடிக்க ஏவிஎம் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. தயக்கத்தோடுதான் ஏற்றுக்கொண்டேன். அங்கு பணியாற்றி வந்த தலைமை ஒப்பனைக் கலைஞர் இனி, எனக்கு பொட்டு வைத்து விட்டு, “விகேராமசாமியை 19வயதிலேயே அப்பாவாக்கினேன்! இன்று நீ… மேலும் மேலும் அப்பா வேடம் தாங்க உங்களுக்கு இறைவன் அருள் புரிவாராக! -என்று ஆசி கூறினார். அவரது வாக்கு பலித்து விட்டது. என் கருத்த முடிக்கு நரை பூசி தொடர்ந்து அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கிறேன்!” என்றார்.
இதேபோல சில வருடங்களுக்குப் பிறகு மேஜர் சுந்தரராஜன் சிங்கப்பூர் போயிருந்தார், அன்று மாலையில் யாரோ ரசிகை பேசுவதாக ஹோட்டல் வரவேற்பறையிலிருந்து போன் வந்தது. எடுத்து பேசினார்.“ஹலோ நீங்க நடிகர் மேஜர் சுந்தரராஜனா…?” என்று இளம் பெண்ணின் குரல் மறுமுனையில் ஒலித்தது. பரவாயில்லை, நமக்கும் இளம் ரசிகைகள் இருக்கிறார்களே என்று இவர் மகிழ்ச்சியுடன் ‘ஆமா, நான்தாங்க! என்றார்.“உங்க கிட்ட உங்க ரசிகை பேசணுமாம்… இருங்க பாட்டிக் கிட்டே போனை தர்றேன் ” என்று அந்த இளம்பெண் கூறியதும் மேஜர் நொந்து போனார்.“என்னை வயதானவன் என்றே முடிவு செய்து விட்டார்களே…” என்று பெருமூச்சு விட்டாராம்.
சினிமா செய்திகள் தொகுப்பு – சபீதா ஜோசப்

Leave A Reply

%d bloggers like this: