புதுதில்லி, ஜூன் 6-வானில் நிகழும் அதிசய நிகழ்வாக பூமி மற்றும் சூரியன் இடையே கடந்து செல்லும் வெள்ளிக்கிரக பயணத்தை, இந்தியாவில் உள்ள மக்கள், வானவியல் ஆய்வாளர்கள் கண்டு மகிழ்ந்தனர். வெள்ளிக் கிரகம் இப்படி கடந்து செல்லும்போது, சூரியனில் கரும்புள்ளி போல காணப்பட்டது. இதனை, டெலஸ் கோப் மூலம் மக்கள் பார்த்தனர். இதுபோன்று வெள்ளிக் கிரகம் கடந்து செல்வதை பார்க்க, இன்னும் 105 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். வானில் இந்த அரிய நிகழ்வை மேகம் மூடி மறைத்ததால் தில்லி மற்றும் வட இந்தியாவின் சில இடங்களில் வெள்ளிக்கிரகம் கடந்து செல்வது சரியாகத் தெரியவில்லை.இந்த நிகழ்வு நவீன ஆராய்ச்சியின் அற்புதமான தொடர்பாக இருந்தது என தில்லி கோளரங்க இயக்குநர் என்.ரத்னாஸ்ரீ கூறினார்.சூரியனுக்கு இடையே வெள்ளிக்கிரகம் கடந்து செல்லும் நிகழ்வு புதன் காலை 5.42 மணிக்கு தெரியவேண்டும். ஆனால் காலை 7 மணிக்குத் தான் தெரிந்தது. மேக மூட்டமே இதற்கு காரணம் ஆகும். காலை 10.19 மணி வரை இந்த அரிய நிகழ்வு தெரிந்தது. வெள்ளிக்கிரகம் கடந்து செல்லும் பயணத்தை 105.5 ஆண்டுகள் கழித்து 2117ம் ஆண்டுதான் பார்க்க முடியும்.வெள்ளிக்கிரகம் கடந்து செல்லும் நிகழ்வை தீவிர சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடிகள் மூலமே பார்க்க வேண்டும் என இந்திய கோளரங்க சொசைட்டியின் என்.ஸ்ரீரகுநந்தன் குமார் கூறினார். தமிழகத்திலும் கேரளாவிலும் இத்தகைய அரிய நிகழ்வை மக்கள் பார்த்துக் ரசித்தனர்.இந்த காட்சியை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என்பதற்காக மெரினா கடற்கரை, கோட்டூர் புரம், பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மதுரை
மதுரையில் 50 பள்ளிகளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் டெலஸ்கோப் மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.இந்த அபூர்வ காட்சி காலை 6.30 மணி முதல் 10.20 மணி வரை நீடித்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் தரப்பட்டது.இராமேஸ்வரத்திலும் இதனை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: