திருப்பூர், ஜூன் 6-பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை மாபெரும் தர்ணா போராட்டங்கள் நடைபெற்றன.பிஎஸ்என்எல்-லில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ உதவித்தொகை , விடுப்பு ஊதியம், போனஸ் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை நிதி நிலையை காரணம் காட்டி பிஎஸ்என்எல் நிர்வாகம் வழங்க மறுத்து வருகிறது. இதைக் கண்டித்தும், ஏற்கனவே இருக்கும் அனைத்து உரிமைகளை வெட்டக்கூடாது, சலுகை வழங்குவதில் ஊழியர்களிடையே பாரபட்சமாக நடந்து கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், என்எப்டிஈ, எஸ்என்இஏ, ஏஐபிஎஸ்என்எல்ஈஏ, டிஇபியு, எஸ்இடபிள்யூஏ பிஎஸ்என்எல், எப்என்டிஓபிஇஏ, ஏஐஜி, பிஎஸ்என்எல்எம்எஸ் ஆகிய சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து சங்கங்கள் சார்பில் கூட்டுப் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. இக்கூட்டமைப்பின் சார்பில் புதனன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக நடைபெற்ற தர்ணா போராட்டத்துக்கு சௌந்தரபாண்டியன், வாலீசன், ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அகமது போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் பி.ஆர்.நடராஜன் உள்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். இதில் பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். காலை தொடங்கி மாலை வரை நாள் முழுவதும் இந்த போராட்டம் நடைபெற்றது.
உதகை
உதகை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் டி.பி.அர்ஜூனன் தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.பெரியசாமி, செயலாளர் வி.மகேஸ்வரன், எப்என்டி மாவட்டச் செயலாளர் அசோக்குமார், அதிகாரிகள் சங்க இந்திரதேவன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
கோத்தகிரி
கோத்தகிரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கிளைத் தலைவர் ரசோரியா, எஸ்என்இஏ மாவட்டத் தலைவர் செல்வகுமாரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஊழியர் சங்கத்தின் கிளைச் செயலாளர் சுபீர், செல்வக்குமார், மாவட்ட துணைப் பொருளாளர் புஷ்பராஜ், அசோக்குமார் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.மேலும் இதில் சங்கத்தின் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பிரசாந்த், நடராஜ், இருதயம், செல்வராஜ், மணி, ஈஸ்வரன், மருதராஜ், சம்பத், ஓய்வுபெற்ற ஊழியர் ஜார்ஜ், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூடலூர்
கூடலூர் தொலைப்பேசி முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு ஜேம்ஸ் உதயசிங், சுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர். எஸ். அருள்செல்வம் முன்னிலை வகித்தார். இத்தர்ணா போராட்டத்தை ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகி வர்க்கீஸ் துவக்கி வைத்து உரையாற்றினார். இதில் அரசு ஊழியர் சங்கத்தின் சலீம், சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஆசைத்தேன்மொழி, ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் தங்கராசு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இத்தர்ணா போராட்டத்தை நிறைவு செய்து ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.பெரியசாமி நிறைவுரையாற்றினார்.

Leave A Reply

%d bloggers like this: