திருப்பூர், ஜூன் 6-சாலை பணியாளர்களின் பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், சாலைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைக்காமல் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் ஊர்வலம் நடைபெற்றது.திருப்பூரில் ராயபுரம் பூங்கா முன்பிருந்து செவ்வாயன்று மாலை தொடங்கிய ஊர்வலத்துக்கு திருப்பூர் கோட்ட அமைப்பாளர் ராமன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.விஜயகுமார் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் ராயபுரம் சாலை, நேரு வீதி, டவுன்ஹால் சந்திப்பு வழியாக குமரன் சாலையில் உள்ள நெடுஞ்சாலை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தைச் சென்றடைந்தது.அங்கு சங்க மாநிலத் துணைத் தலைவர் ஆ.அம்சராஜ், கோட்டச் செயலாளர் என்.சிவக்குமார், கருப்பன், கண்ணதாசன், கே.ராஜூ உள்பட சங்க நிர்வாகிகளும், பணியாளர்களும் தங்கள் கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம்ஒப்படைத்தனர்.
சேலம்
சேலம் ரயில் நிலையம் முன்பு துவங்கிய பேரணிக்கு மாவட்ட தலைவர் கலைவாணன் அந்தோணி தலைமை தாங்கினார். பல்வேறு முக்கிய சாலைகள் வழியே சென்ற இப் பேரணி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதன்பின், கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அளித்தனர்.இப்பேரணியின் போது முந்தைய திமுக அரசைப் போலவே தற்போதைய அதிமுக அரசும் சாலைப் பணியாளர் கோரிக்கைகள் குறித்து பாராமுகமாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் தருணத்தில் சாலைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஊர்வலத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: