அணித்தலைவர் செட்டேஸ்வர் பூஜாராவின் திறமையான வழி நடத்தலில் இந்திய ‘ஏ’ அணி இரண்டு விக்கெட் கையிருப்பில் மேற்கிந்திய ‘ஏ’ அணியை வென்றது.இந்திய ‘ஏ’ அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அங்கு பிரிட்ஜ்டவுனில் முதல் டெஸ்ட் நடைபெற்றது. முதல் டெஸ்ட்டின் கடைசி நாளான நான்காம் நாளன்று இந்தியா வெற்றிபெற 164 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்தியாவிடம் ஏழு விக்கெட்டுகள் கையில் இருந்தன.மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியை முதலில் நொறுக்கிவிட்டனர். ஜொனாதன் கார்ட்டரும் டெலோர்ன் ஜான்சனும் இந்தியாவை 115க்கு எட்டு விக்கெட்டுகள் என்ற நிலையில் கொண்டு நிறுத்தினர்.மறுமுனையில் ரோகித் சர்மா, மனோஜ் திவாரி, சிகார் தவான், விருந்தமான் சகா ஆகியோர் ஆட்டமிழந்த வேளையில், பூஜாரா திடமாக நிதானமாக ஆடினார். அவருக்கு துணையாக ஷாமி அகமது ஆடினார். 323 நிமிடங்கள் களத்தில் நின்று, 222 பந்துகளைச் சந்தித்து 10 நான்குகளை அடித்து 96 ஓட்டங்களைக் குவித்த பூஜாரா இந்திய அணிக்கு வெற்றியைப் பரிசாக அளித்தார். அவரும் ஷாமியும் இணைந்து ஒன்பதாவது விக்கெட்டுக்கு 73 ஓட்டங்களைச் சேர்த்தனர். 24 வயதான பூஜாரா டெஸ்ட் ஆடும் திறமையுடையவர் என்று கருதப்படுகிறார். ஆனால் கிடைத்த ஓரிரு வாய்ப்புகளில் அவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. தற்போது அவர் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார். பூஜாரா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டது பொருத்தமே.

Leave A Reply

%d bloggers like this: