குர்கான்… ஹரியானா மாநிலத்தின் தொழில் கேந்திரமான நகரம். ஆட்டோ மொபைல் தொழிலில் சிறந்து விளங்கும் இங்கு இருச்சர வாகன உதிரிபாக உற்பத்தி துவங்கி விமானங்கள் தயாரிப்பது வரை நடைபெற்று வருகிறது. எனவே இங்கு உற்பத்தி சார்ந்த நிறுவனங்களும் தன்னியல்பாய் அதில் பணியாற்றும் தொழிலாளர்களும் மிகவும் அதிகம். இந்நகரின் தொழிலாளர் நிலை, தொழிற்சங்க உரிமை, போராட்டங்கள், அதில் பெற்ற படிப்பினைகள் குறித்த அனுபவத்தோடு கோவை மாநகரில் நடைபெற்று வரும் சிஐடியு அகில இந்திய பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஹரியான மாநில சிஐடியு தலைவர் சத்பீர் சிங்குடன் உரையாடினோம். தோழர் சத்பீர், முதலில் குர்கான் நகரின் தொழில் சூழல், தொழிலாளர் நிலை குறித்து சொல்லுங்களேன்.குர்கான் சுமார் 12 லட்சம் மக்களைக் கொண்ட மாநகரம். 1980களிலிருந்தே ஆட்டோ மொபைல் தொழில் நகரமாகி திட்டமிட்டு வளர்ந்து வருகிறது. மத்திய அரசின் உதவியுடன் மாருதி 1982ல் இங்கு துவங்கப்பட்டது. பின்னர் மாருதியுடன் சுசூகி என்னும் ஜப்பான் நிறுவனம் சேர்ந்து மானேஷ்வர் நகரில் ஒரு நிறுவனம், ஹோண்டா, ஹீரோ ஹோண்டா, ஆட்டோ மேக்ஸ், எம்இஎஸ்எல், ஓமெக்ஸ், ஐஏபி என்று எண்ணற்ற நிறுவனங்கள் குர்கான் மற்றும் அதனை ஒட்டிய தாரூவேடா, மானேஷ்வர் என பல பகுதிகளுக்கும் விரிவடைந்தன.
இங்கு டீசல் எஞ்சின் தயாரிப்பு மின்சார எந்திரங்கள் தயாரிப்பு, மோட்டார் சைக்கிள், கார்கள், விமானங்கள் என ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகள் பரந்து விரிந்துள்ளன. குர்கான், பாவெல், தார்வேடா, மானேஷ்வர், பச்காவ்ன், பினோலா போன்ற பகுதிகளை ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி பெல்ட் என்றே அழைப்பார்கள், குர்கான் அதையொட்டி பரீதாபாத் போன்ற நகரங்களில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் மட்டுமே இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.இங்கெல்லாம் தொழிலாளர் நிலையும், அவர்கள் அந்நிறுவனங்களில் பணியாற்றும் பணிச் சூழலும் எப்படிப்பட்டதாக உள்ளது? மாருதி கம்பெனியை மட்டுமே ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இங்கு வெறும் 4320 பேர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள். ஆனால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தற்காலிகம், பயிற்சி என பல பெயர்களில் பணியாற்றி வருகின்றனர். நிரந்தரத் தொழிலாளிகள் மட்டுமே 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுவர்.மற்றவர்களுக்கு கமிஷன், பீஸ்ரேட் உள்ளிட்ட பல பெயர்களில் 8000 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. அதிலும் மாதம் ஒரு நாள் லீவு போட்டால் சம்பளத்தில் 20 சதவிகிதம் வெட்டப்படும். இரண்டு நாள் என்றால் 50 சதவிகிதம், 3 நாட்கள் விடுமுறை என்றால் 70 சதவிகிதம் வரை வெட்டப்பட்டு வெறும் 1000, 2000 ரூபாய்கள் மட்டுமே பெறவேண்டிய அத்துக்கூலி நிலைதான் அவர்களுக்கு. ஏதோ சம்பளம் மட்டுமே அல்ல பிரச்சினை. குர்கான் போன்ற வளர்ந்த நகரங்களில் வாடகை வீடு கிடைப்பது, போக்கு வரத்துக்கு செலவாகும் பெரும் பணம் மற்றும் நேரம், விலைவாசி உயர்வு என வாழ்வாதாரத்தின் அத்தனை அம்சங்களுமே சிரமமானவை. பின்னர் கூடுதல் வேலை நேரம், பணிச்சுமை, பணியிடத்து அத்துமீறல் என பல்வேறு விதக் கொடுமைகளையும் சந்திக்க வேண்டிய அவலத்தில் தான் உள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கைகளோ, தொழிலாளர் உரிமைகளின் பால் அரசின் தலையீடோ ஏதும் இல்லையா? இதனை அந்தத் தொழிலாளர்கள் எப்படித்தான் எதிர்கொண்டார்கள்?பீகார், உ.பி., ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்தவர்கள், உள்ளூர் தொழிலாளர்கள் என கலந்தே தொழிலாளர்கள் அங்கு பணியாற்றுகின்றனர். இருந்தாலும் அவர்கள் தினசரி எதிர்கொண்ட பிரச்சனைகள் அவர்களை ஒன்றுபடுத்தின.
பல நிறுவனங்களில் தன்னெழுச்சிப் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின. தங்குமிட வசதி கொடு, பயணப்படி வழங்கு போன்ற சிஐடியு அமைப்பின் எளிய ஆனால் அவர்களின் அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் கவ்விப் பிடித்தன. பல்வேறு அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் இருந்தபோதும், பல நிறுவனங்களிலும் சிஐடியுவின் தலைமையின் கீழ் தொழிலாளர்கள் அணி வகுத்தனர். மாருதி நிறுவனத்தில் தொடர்ந்து நான்கு மாதங்கள் நீடித்த உறுதிமிக்க போராட்டம் ஓர் உதாரணம். மற்றபடி தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு தலையிடுவதோ, தொழிலாளர்துறை உள்ளிட்ட நிர்வாகங்கள், முத்தரப்பு உடன்பாடுகள் என்றெல்லாம் ஏதுமில்லை. வலிமைமிக்க போராட்டங்களுக்குப் பின்னரே அவை ஓரளவு சாத்தியமாயிற்று.தொழிலாளர் போராட்டங்களின் தாக்கங்களும், தங்கள் அமைப்பிற்குமான அனுபவங்களும் குர்கான் தருவதென்ன?இன்னும் ஆயிரக்கணக்கான நிறுவனங்களுக்கு சிஐடியு அமைப்பு விரிந்து பரவவேண்டியுள்ளது. ஆனால் மாருதி, ஹோண்டா, ஓமெக்ஸ், ஆட்டோமேக்ஸ் போன்ற நிறுவனங்களில் சிஐடியு நடத்திய தீரமிக்க போராட்டங்கள் அமைப்பிற்கு பெரும் மரியாதையையும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இன்று பல நிறுவனங்களில் முத்தரப்பு ஒப்பந்தம், ஊதிய உயர்வு போனஸ், தங்குமிட வசதி, போக்குவரத்து செலவுத் தொகை, திருவிழா விடுமுறை எனப் பல்வேறு சலுகைகள் தரப்படுகின்றன. இந்த குறைந்தபட்ச நம்பிக்கை பெறுவதற்கே சிஐடியு பெற்ற அடிகள் ஏராளம். ஹோண்டா நிறுவனத்தில் நடந்த போராட்டத்தில் ஒருபுறம் பழிவாங்கல், மறுபுறம் குண்டர்களின் தாக்குதல், போலீசாரின் தாக்குதல், வழக்குகள் என ஏராளமான தாக்குதல்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. குடிநீரின்றி, மின்சாரமின்றி, தங்குமிடம் இதர வசதிகளின்றி வாழ்வதற்கே துயரப்பட்ட, மன ஆழுத்தத்தில் இருந்த தொழிலாளர்களுக்கு நம்பிக்கையையும், வாழ்வாதார வசதிகளை செய்துதர வேண்டிய நிர்பந்தத்தை பன்னாட்டு, உள்நாட்டு பெறு நிறுவனங்களுக்கு ஏற்படுத்தியதிலும் இந்த போராட்டங்கள் நல்ல தாக்கத்தையே உருவாக்கி இருக்கின்றன.ஆனால், தந்திரசாலி முதலாளித்துவ வாதிகளை மிகுந்த எச்சரிக்கையுடனேயே அணுகவேண்டியுள்ளது.ஏன்? உங்கள் போராட்டத்தில் அதுபோன்ற அனுபவங்களை சந்தித்துள்ளீர்களா?ஆம், அப்படியும் ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்.
ஓரியன் கிராப்ட் எக்ஸ்போர்ட் இண்டஸ்ட்ரீ மற்றும் ஹோண்டா கேன் நிறுவனங்களில் போராட்டம் பற்றி எரிந்து கொண்டிருந்த நேரம். ஹோண்டா கேன் நிறுவனத்தில் போராடிக்கொண்டிருந்த தொழிலாளர்களை நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் ஒரே இடத்தில் கூட்டிவைத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் நிர்வாகிகள் பேச்சை வளர்த்துக் கொண்டே சென்றனர். அந்த இடைப்பட்ட நேரத்தில் போலீசார் ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் சுற்றிவளைத்தனர். நிர்வாகிகள் சத்தமின்றி கழன்று கொள்ள அங்கு போலீசார் தங்கள் வெறியாட்டத்தை அரங்கேற்றினர். லத்தி அடிகளும், துப்பாக்கிச்சூடு காயங்கள் என ஒரு யுத்தமே நடந்தது எனலாம். ஆனாலும் எங்களது உறுதிமிக்க போராட்டத்தால் ரூ.8000 வரை சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகளைப் பெற்று வெற்றியே பெற்றோம். இதுபோன்ற ஏராளமான அனுபவங்களே தொழிற்சங்க இயக்கத்தின் படிப்பினைகளாகும் என்றார் சத்பீர்சிங்.

Leave a Reply

You must be logged in to post a comment.