திருப்பூர், ஜூன்.6-மத்திய ஜவுளி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான அன்னிய தொழில் கொள்கையின் ஆண்டறிக்கைக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் விடுத்துள்ள அறிக்கை.யில்கூறப்பட்டுள்ளதாவது:மத்திய வணிகத்துறை, தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, அன்னிய தொழில் கொள்கைக்கான ஆண்டறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இதில், ஏற்றுமதியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, “பேக்கிங் கிரெடிட்’ மீதான இரண்டு சதவிகித வட்டி சலுகை, 2013ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுவரை சிறு, குறு ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் இருந்த இத்திட்டம், ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 11.5 சதவிகிதம் முதல் 13.5 சதவிகிதம் வரை வட்டி செலுத்தி வரும் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பயனடைவர்.“மார்க்கெட் லிங்க்டு போகஸ் புராடக்ட் ஸ்கீம்’ மூலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது, இரண்டு சதவிகித சலுகை அட்டை வழங்கப்படும். மெஷின்களை இறக்குமதி செய்யும்போது அட்டையை பயன்படுத்தி சலுகை பெறும் திட்டமும், 2013 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மெஷின்கள் இறக்குமதியின்போது, இறக்குமதி வரி சலுகை பெறும் “ஜீரோ டியூட்டி எக்ஸ்போர்ட் புரமோஷன் கேபிடல் கூட்ஸ்’ திட்டமும் 2013 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. “டப்’ திட்டம் மற்றும் “ஸ்டேட்டஸ் ஹோல்டர்ஸ்’களும், இத்திட்டம் மூலம் சலுகை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்களின் போக்குவரத்து செலவை குறைக்கவும், வங்கி நடவடிக்கைகளை எளிதாக ஏற்றுமதியாளர்களுக்கு தெரிவிக்கவும், இ-பி.ஆர்சி., திட்டத்தை, வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் துவக்கியுள்ளது.மத்திய அமைச்சர் சமர்ப்பித்துள்ள ஆண்டறிக்கையில், திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம், பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டுள்ள பனியன் தொழில் துறையினர் பயனடைவர் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் அன்னிய தொழில் கொள்கைக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமும் (டீமா) வரவேற்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் முத்துரத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, நாட்டின் ஏற்றுமதிக் கொள்கையில் இன்ட்ரஸ்ட் சப்வென்சன் ஸ்கீம் எனும் ஏற்றுமதிக்கு வாங்கும் கடன்களுக்கான வட்டி தள்ளுபடி 2 சதவிகிதம் மேலும் ஓராண்டு காலம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி வர்த்தகச் சலுகைகளும் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.