தடுமாற்றத்தில் இந்திய ‘ஏ’ அணி
மேற்கிந்திய ஏ அணிக்கு எதிரான முதலாவதுடெஸ்ட் போட்டியில் வெற்றிபெற 186 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய ‘ஏ’ அணி மூன்று விக்கெட்டுகளை 22 ஓட்டங்களுக் குள் இழந்து தடுமாறுகிறது.விக்கெட் இழப்பின்றி 3 ஓட்டங்களுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய மேற்கிந்தியா 210 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. முதல் இன்னிங்சின் முன்னிலையான 25 ஓட்டங்களைக் கழித்துவிட்டால், இந்தியா வெற்றிபெற 186 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்தியா 22 ஓட்டங்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தவிக்கிறது.அபிநவ் முகுந்த் மீண்டும் பூஜ்யம் எடுத்தார். ரஹானேயின் முதல் ஸ்டம்ப் நடைபழகியது. இரவு காவலராக வந்த ராகுல் சர்மாவும் ஆட்டம் இழந்தார். இந்திய ‘ஏ’ அணித்தலைவர் செட்டேஸ்வர் பூஜாராவும் சிகார் தவாணும் களத்தில் உள்ளனர்.சிம்மன்ஸ் (53), பிரத்வெய்ட் (50) இணை 68 ஓட்டங்கள் எடுத்தனர். இந்த இணை பிரிக்கப்பட்ட பின் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்கிந்திய அணி விக்கெட்டை இழந்து கொண்டு வந்தது. புவனேஸ்வர்குமார் 44 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மட்டையில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா பந்து வீச்சிலும் பிரகாசித்தார். அவர் 46 ஓட்டங்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

பிரெஞ்ச் ஓபன் அரை இறுதியில் பூபதி-சானியா இணை
இந்திய கலப்பு இரட்டையர் இணையான மகேஷ்பூபதி – சானியா மிர்சா அணி பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரை இறுதிக்குச் சென்றுள்ளது. அவர்கள் செக் குடியரசு – அமெரிக்க கலப்பு இணையான கேவெட்டா பெஸ்கி-மைக் பிரியன் இணையை 6-2, 6-3 என்ற செட்டுகளில் தோற்கடித்தனர்.இந்திய இணை மிகவும் சிறப்பாக ஆடியது. அவர்கள் சந்தித்த நான்கு சர்வீஸ் முறியடிப்பு புள்ளிகளைச் சமாளித்து வென்றனர். அதேபோல் எதிரணியின் ஐந்து சர்வீஸ் ஆட்டங்களை முறியடிக்க கிடைத்த வாய்ப்புகளில் நான்கைக் கைப்பற்றினர்.ராபெல் நாடல் பிரெஞ்ச் ஓபன் கால் இறுதியில் நுழைந்துள்ளார். கடைசி 16 சுற்றில் நாடல் அர்ஜென்டினாவின் ஜூவன் மொனாகோவை 6-2, 6-0, 6-0 எனத் தோற்கடித்தார். மொனாகோவை படுமோசமாகத் தோற்கடித்ததற்காக நாடல் மனம் வருத்தப்பட்டார்.வினா டெல் மெர், ஹெஸ்டன் ஆகிய செம்மண் தளங்களில் பட்டம் வென்ற நம்பிக்கையோடு ஆடிய மொனாகோவை நாடல் துவம்சம் செய்துவிட்டார். கால் இறுதியில் நாடல் சக நாட்டவரான நிகோலஸ் அல்மக்ரோவை சந்திக்கிறார்.விரோதமான சுற்றுச்சூழலைப் பொருட்படுத்தாமல் ஸ்காட்லாந்து வீரரான ஆன்டி மர்ரே, பிரான்சின் ரிச்சர்ட் காஸ்கட்டை 1-6, 6-4, 6-1, 6-2 என வென்றார். பிரான்ஸ் மண்ணில் பிரான்ஸ் வீரரை எதிர்கொள்வது கடினம் என்பதை மர்ரே உணர்ந்து கொண்டார். ஆடுகளத்தில் அவர் இறங்கியபோது கேலிக்கூச்சலும் கிளம்பியது.

Leave a Reply

You must be logged in to post a comment.