கோவை, ஜூன் 5-தமிழ் சினிமா வரலாற்றில் அழியாத ஒரு பதிவையும், தடத்தையும் வழக்கு எண் 18/9 திரைப்படம் உருவாக்கியுள்ளது என இப்படத்திற்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் கலைஞர்கள், தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு சார்பில் கே.ஜி திரையரங்கில் வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இப்பாராட்டு விழாவிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் செயலாளர் தி.மணி தலைமை தாங்கி பேசுகையில், நல்ல படங்களை ஆதரிப்பதும், கொண்டாடுவதும் தமுஎகச வின் வழக்கம். இயக்குநர் மிருணாள்சென் கூறியதுபோல, இயக்குநர் என்பவர் ஒரு சமூக விஞ்ஞானி. அவரது கூற்றைப்போல இயக்குநர் பாலாஜி சக்திவேல் திகழ்கிறார் என்றார்.சிபிஎம் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் பேசுகையில், படத்தில் நடித்துள்ள 17 கதாபாத்திரங்களும் தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ் சினிமா சூழலில் வரப்போகிற படத்தைத்தான் கொண்டாடுகிறார்கள்.
வெளிவந்த படம் எப்படி என்று பேசுவதே இல்லை. ஆனால் தமுஎகச அதை பேசுகிறது என்று பாராட்டு தெரிவித்தார். இதன்பின், கவிஞர் புவியரசு வாழ்த்திப் பேசுகையில், இந்த படம் பார்த்ததும் பதற்றமாக உள்ளது. இந்த படம் மனசாட்சியை தொட்டு இருக்கிறது. ஆனால் மனசாட்சியோடு படம் பார்க்கிற உள்ளங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. தமிழ்சினிமா வரலாற்றில் அழிக்க முடியாத தடத்தையும், பதிவையும் வழக்கு எண் திரைப்படம் உருவாக்கி உள்ளது. இந்த படம் உலகின் தலைசிறந்த படமாக போற்றப்பட வேண்டும். இது போன்ற படங்களை தொடர்ந்து எடுக்க வேண்டும். இதற்காக இடதுசாரிகள் தொடர்ந்து உங்கள் பின் இருக்கிறோம் என்றார்.மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் பேசுகையில், சினிமா என்றாலே 150 கோடி என்ற இலக்கணத்தை உடைத்து விட்டது வழக்கு எண் 18/9 திரைப்படம். வழக்கமான தமிழ் திரைப்பட இலக்கணமான 5 பாடல்கள், சண்டைக்காட்சிகள், சினிமாத்தனம் உள்ளிட்டவற்றை தவிர்த்துதரமான படமாக வழக்கு எண் 18/9 வெளிவந்துள்ளது. இதற்காக பாலாஜி சக்திவேலை பாராட்டுகிறேன்.மேலும் இது தமிழ் திரைப்படங்களை நல்ல திசை நோக்கி பயணிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை எனக் கூறினார்.இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த முத்துராமன் பேசுகையில், அனைத்து தலைமுறையினரும் இப்படத்தை காண வருகிறார்கள். அழுக்கை அழகாகவும், அழகை அழுக்காகவும் அழகாக படம் பிடித்துள்ளார்கள் என்று கவிஞர் அறிவுமதி சுட்டிக்காட்டியதை அவர் இங்கு நினைவு கூர்ந்தார்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், இதுபோன்று திரைப்படத்திற்கு ஆதரவு தருவது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தான். இந்த படத்திற்கு சிறப்பு திரையிடல் மற்றும் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எங்களை மேலும் ஊக்கப்படுத்தும் என்றார். தொடர்ந்து ரசிகர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இவ்விழாவில் தமுஎகச மாவட்டத் தலைவர் பெ.சக்திவேல், இயக்காக்கோ சுப்பிரமணியம், வழக்கறிஞர் வைகை, மாவட்ட நிர்வாகிகள் மு.ஆனந்தன், பரமேஸ்வரன், பாலாஜி, சுரேஷ், தன்மான முருகன், இரா. வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.