அமெரிக்க ராணுவத்தின் ஆக்டோபஸ் கரங் கள், ஆசியாவை நோக்கி நீள்கின்றன. 2020ம் ஆண்டிற்குள், உலகம் முழுவதும் உள்ள தனது படை பலத்தில் 60 சதவீதத்தை ஆசிய- பசிபிக் பிரதேசத்தில் உள்ள நாடுகளில் குவிப்பது எனத் தீர்மானித்திருப்பதாக பகிரங்க மாகவே அறிவித்துள்ளது ஒபாமா நிர்வாகம். இதற்கான முஸ்தீபுகளைச் செய்வதற்காக தனது பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனேட்டாவை ஆசிய நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் ஜனாதிபதி ஒபாமா. இதன் ஒரு பகுதியாகவே லியோன் பனேட் டா, இந்தியாவிற்கு விஜயம் செய்கிறார். ஆப்கா னிஸ்தானில் தனது ராணுவத்திற்கு இந்தியா எப்படி உதவ வேண்டும் என உத்தரவு போட அவர் வருகிறார்.முன்னதாக வியட்நாமிற்குச் சென்று நோட்டம் பார்த்த அவர், பிலிப்பைன்ஸ், சிங்கப் பூர் என 7 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதையொட்டி, சிங்கப்பூரில் நமது ஆசிய- பசிபிக் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, ஐப்பான், தென்கொரியா போன்ற அமெரிக்க அடிவருடி நாடுகள் உட்பட 30 நாடு களின் ராணுவ – சிவில் அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாடு ஒன்றையும் லியோன் பனேட்டா நடத்தியிருக்கிறார்.எண்ணெய் வளம் கொழிக்கும் அரபு உலகில் தனது ராணுவத்தின் மூலம் விவரிக்க முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா, வீழும் பொருளாதாரத்தைக் காத்துக்கொள்ள உலகின் மிகப்பெரும் சந்தைகள் அமைந்துள்ள ஆசிய- பசிபிக் பிரதேச நாடுகளை ராணுவ ரீதியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முனைகிறது. இப்பிரதேசத்தில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை தனது தலையாட்டி பொம்மைகளாக மாற்றிவிட்டால், வல்லமையோடு வளர்ந்து சவால் விடுக்கும் மக்கள் சீனத்தைத் தனிமைப் படுத்தி, குழப்பத்தை விளைவித்துக் கொண்டே இருக்கலாம் என அமெரிக்கா திட்டமிடுகிறது.கடந்த ஒரே ஆண்டில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் 172 முறை கூட்டு ராணுவப் பயிற்சி என்ற பெயரில் ஆசிய-பசிபிக் பிராந்தியத் தின் பிரதான கடல் பகுதிகளையும், காட்டுப் பகுதிகளையும் ஊடுருவிப் பார்த்துள்ளது அமெரிக்க ராணுவம். 2020 வரை அரபு உலகம், அதன் பின்னர் ஆசியா என தேசங்களை அடிமைகளாக்கி, வளங்களைக் கொள்ளையடித்து கொழுத்துத் திரிய வட்டமிடுகிறது ஏகாதிபத்தியக் கழுகு. இத்தகைய முயற்சிகளுக்கு மக்கள் சீனம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவப் படைகள் ஆசிய நாடுகளின் கடல் பகுதிகளில் குவிக்கப்பட்டால் இப்பிரதேசத்தின் அமைதி ஒட்டுமொத்தமாக சிதையும் என்று எச்சரித்துள்ளது. ஆனால் இந்த எச்சரிக்கையை லியோன் பனேட்டா நிராகரித்துள்ளார். சீனா வைக் குறிவைத்து இத்தகைய முயற்சிகளை அமெரிக்கா மேற்கொள்ளவில்லை என்று கூறி யுள்ள அவர், ஆசிய- பசிபிக் நாடுகளில் அமெ ரிக்காவின் இருப்பை உறுதி செய்து கொள்ளவே படைகளைக் கொண்டுவர திட்டமிட்டிருப் பதாக கூறியுள்ளார். பனேட்டா கூறியதன் பொருள், அப்பட்ட மான ராணுவ ஆக்கிரமிப்பு என்பதைத் தவிர வேறல்ல. படையெடுக்காமல் நடக்கப்போகும் படையெடுப்பு அது. அறிவிக்கப்படாத யுத்தம்.அதைத் தடுத்து நிறுத்துவது சீனாவின் பணி மட்டுமல்ல; இப்பிரதேசத்தின் மிகப்பெரிய நாடான இந்தியாவின் கடமையும்கூட!

Leave A Reply

%d bloggers like this: