நாமக்கல், ஜூன் 5- நாமக்கல் நகரில் அமைந்துள்ள நகராட்சிப் பூங்காவில் ரூ.50 ஆயிரம் செலவில் கூடுதலாக விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.நாமக்கல் நகரில் போதிய பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத நிலை நிலவி வந்தது. இதைக் கருத்தில் கொண்டு நகரில் பராமரிப்பின்றி காணப்பட்ட செலம்பகவுண்டர் பூங்காவை விரிவுபடுத்தி புனரமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது. இதனடிப்படையில், பூங்காவின் அருகிலிருந்த தினசரி சந்தை திருச்செங்கோடு சாலையிலுள்ள வாரச்சந்தை இடத்துக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்தப் பூங்கா தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டு புனரமைக்கப்பட்டது. கடந்த இரு வாரங்களுக்கு முன் திறக்கப்பட்ட இந்தப் பூங்காவுக்கு தற்போது தினமும் ஆயிரக்கணக்கானோர் குழந்தைகளுடன் குடும்பத்துடன் வந்துச் செல்வதால் விளையாட்டு உபகரணங்கள் பற்றாக்குறை நிலவியது. இதனால், ஒவ்வொரு விளையாட்டு உபகரணங்களின் முன்பும் சிறுவர், சிறுமிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, சில விளையாட்டு உபகரணங்களில் அதிகப்படியான சிறுவர்கள் ஏறி விளையாடுவதால் விரைவில் பழுதாகவும், விபத்துகள் ஏற்படும் அபாயம் இருந்தது.எனவே, பூங்காவில் கூடுதலாக விளையாட்டு உபகரணங்கள் அமைத்திடவும், குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி அங்கு ஊழியர்களை நிறுத்தி கண்காணிக்கவும் பொதுமக்கள் கோரிக்கை எழுப்பினர். இதையடுத்து, நகராட்சி சார்பில் பூங்காவில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் கூடுதலாக விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன. இதனால், பற்றாக்குறையின்றி சிறுவர்கள் விளையாடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: