பொள்ளாச்சி, ஜூன் 5- பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆதாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்ற போது காட்டுத் தேனீக்கள் கொட்டியதில் 6 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையத்தில் வசிக்கும் நெசவுத் தொழிலாளி ரங்கராஜன்(52) இவரது மனைவி பட்டீஸ்வரி(40). மகள்கள் தமிழ்ச்செல்வி(22).இ.சரண்யாதேவி(20) மற்றும் உறவினர்கள், திருப்பூர் அறிவொளி நகரில் வசிக்கும் சாந்தி(38) இவரது மகள் ஹேமலதா ஆகிய ஆறு பேரும் செவ்வாய்க்கிழமை காலை ஆழியாறு அணையை ஒட்டிய வனப்பகுதியில் உள்ள ஆதாளியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.இக்கோவிலின் கீழ் உள்ள ஆழியாறு அணை பகுதிக்கு சென்ற போது ஆதாளியம்மன் கோவில் அமைந்துள்ள மலையின் உச்சியில் இருந்த காட்டுத் தேனீக்கள் திடீரென இந்த ஆறு பேரை கொட்டத் தொடங்கியன. தேனீக்கள் கொட்டியதில் பலத்த காயமடைந்த சாந்தி அதே இடத்தில் மயக்கமானார். மற்ற ஐந்து பேரும் சிறு காயங்களுடன் ஓடிச் சென்று தப்பித்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் 6 பேரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து பொள்ளாச்சி வனச்சரகர்கணேஷ்ராம் கூறியதாவது.வனப் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால் வன விலங்குகள் ஆழியாறு அணையை நோக்கி வரும். ஆதாளியம்மன் கோவில் ஆழியாறு அணையை ஒட்டிய வனப்பகுதியில் உள்ளதால் கோவிலுக்குச் செல்லும் முன்னரே வனத்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தேனீக்களால் தாக்கப்பட்ட 6 பேரும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் நவமலை செல்லும் அரசுப் பேருந்தில் சென்றுள்ளனர். எனவே, இத்தகைய சம்பவங்களை தடுக்க அப்பகுதியில் ரோந்து பணியை மேற்கொள்ள வனத்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: