திருப்பூர், ஜூன் 5-திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆஸ்ரா கர்க் திங்களன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருப்பதால் இங்குள்ள நிலைமைகள் குறித்து ஆய்வு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கந்துவட்டி, நில மோசடி குறித்து புகார்கள் வந்தால் விசாரித்து உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட பணியை முன்னுரிமை என்று கொள்ளாமல் சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு, போக்குவரத்து என அனைத்து துறைகளிலும் தேவையான கவனம் செலுத்தி உரிய பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆஸ்ரா கர்க் இதற்கு முன்பு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் நியமிக்கப்பட்டவர். உத்தப்புரம் தலித் மக்களின் உரிமையை நிலைநாட்டி இருதரப்பு மக்களிடம் அமைதி மலர தீவிர முயற்சி மேற்கொண்டதால் பலதரப்பினரிடமும் பாராட்டுப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: