திருப்பூர், ஜூன் 5-கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில் திருப்பூரில் சாதி, வருவாய், இருப்பிடச் சான்று பெற முடியாமல் பொது மக்கள் அலைக்கழிக்கப்பட்டு வந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் தலையிட்டு, உரியவர்களுக்குச் சான்றிதழ்கள் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்தார்.பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவ, மாணவிகளுக்கு சாதி, வருவாய், இருப்பிடச் சான்றுகள் தேவைப்படுவதால் வழக்கமாக மே மாத இறுதியிலும், ஜூன் மாத தொடக்கத்திலும் வட்டாட்சியர் அலுவலகங்களில் சான்றிதழ்கள் பெற பொது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இது போன்ற சமயங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து விண்ணப்பித்தோருக்கு துரிதமாக சான்றிதழ்கள் வழங்க வருவாய்த்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். திருப்பூரில் கடந்த காலங்களில் கூடுதல் பணியாளர்கள் நியமித்து, சிறப்பு முகாம்கள் அமைத்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.எனினும் இந்த ஆண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகமோ, கோட்ட, வட்ட வருவாய்த் துறையினரோ எவ்வித சிறப்பு ஏற்பாடும் செய்யவில்லை.
விண்ணப்பித்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து அதில் குறித்திருக்கும் தேதியில் வந்து சான்றிதழ் பெற்றுச் செல்லும்படி அரசு ஊழியர்கள் மக்களிடம் கூறிவிடுகின்றனர். இதன்படி குறிப்பிட்ட தேதியில் வந்தால் இன்னும் சான்றிதழ் தயாராகவில்லை. அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் என சொல்லிச் சொல்லி பொது மக்களை அலையக்கழித்து வந்தனர். இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் அலுவலகத்துக்கும் ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி, விண்ணப்பித்தவர்களை அலைக்கழிக்காமல், குறித்த தேதியில் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கே.தங்கவேல் எம்எல்ஏ கேட்டுக் கொண்டார். குறிப்பாக பெரும்பாலான பள்ளிகள் ஜூன் 4ம் தேதி திறந்த நிலையில், அன்றைய தினம் வந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளும்படி பல நூறு பேருக்கு வருவாய்த் துறையினர் டோக்கன் கொடுத்திருந்தனர்.பல பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் பள்ளியில் சேர்வதற்கு சான்றிதழ் ஒப்படைப்பதற்கு கால அவகாசம் வாங்கி வந்திருந்தனர். ஜூன் 4ம் தேதி பள்ளி தொடங்கும் நாள் வரை பல பள்ளி நிர்வாகங்கள் கெடு கொடுத்திருந்தனர். எனவே இறுதி நாளில் சான்றிதழ் கிடைக்காமல் போனால் பல பிள்ளைகளின் கல்வி வாய்ப்பே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டது. இது பற்றியும் மக்கள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேலிடம் புகார் கூறியிருந்தனர்.இது பற்றி எம்எல்ஏ அதிகாரிகளிடம் பேசி ஜூன் 4ம் தேதி குறிப்பிடப்பட்ட அனைவருக்கும் தாமதமின்றி சான்றிதழ்களை வழங்க முயற்சி மேற்கொண்டார். அதன்படி திங்களன்று மாலை பல நூறு பேர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். சாதி, இருப்பிடம், வருவாய் என வகை பிரித்து தனித்தனியாக சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதற்கு சம்பந்தப்பட்டோர் பெயரைஅழைத்து உரியவர்களிடம் சான்றிதழ்களை ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஏராளமானோர் சான்றிதழ்களைப் பெற்றுச் சென்றனர். இதனால் பெற்றோர்கள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேலுக்கு நன்றி தெரிவித்துச் சென்றனர்.ஜூன் 4ம் தேதி என குறித்துத் தரப்பட்ட சிலருக்கு சான்றிதழ்கள் கிடைக்கப்பெறவில்லை. அவர்களை தனியாக அழைத்துச் சென்று வட்டாட்சியரிடம் கே.தங்கவேல் நேரில் பேசி, திங்கள் இரவுக்குள் அவர்களுக்கு சான்றிதழ்களை எழுதி ஒப்படைக்க வலியுறுத்தினார். அதிகாரிகள் அதற்கு ஒப்புக் கொண்டு அனைவருக்கும் சான்றிதழ்களை ஒப்படைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: