கோவை மாநகராட்சி பள்ளிகளில் 81ரூ தேர்ச்சி
கோவை, ஜூன் 4-பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவை மாநகராட்சிப் பள்ளிகள் 81.11 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. ஒப்பணக்காரவீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.சிவகாமி 500க்கு 483 மதிப்பெண்கள் பெற்று கோவை மாநகராட்சிப் பள்ளிகளிலே முதலிடம் பிடித்துள்ளார்.இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் மார்ச் மாதம் 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 16 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 10 உயர்நிலைப்பள்ளிகளிலிருந்து 1,087 மாணவர்களும், 1,639 மாணவிகளும் தேர்வு எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் திங்களன்று (ஜூன் 4) வெளியிடப்பட்டது. கோவை மாநகராட்சியில் 785 மாணவர்களும், 1426 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 72.22 சதவிகிதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 87 சதவிகிதமாகவும் பதிவாகியுள்ளது. கோவை மாநகராட்சி பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 81.11 சதவிகிதமாகும். கடந்த ஆண்டுகோவை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 77.12 சதவிகிதமாக இருந்தது.
இந்த ஆண்டு 4 சதவிகித அளவிற்கு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.இதில், அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் புலியகுளம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளும் நூறு சதவிகித தேர்ச்சி பெற்று முதலிடத்தையும். இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.34 சதவிகித தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தையும், வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 96.15 சதவிகித தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.சிவகாமி 500க்கு 483 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்திலும், மாநகராட்சி எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி ஆர்.நந்திகா ஸ்ரீ 482 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்திலும், ஒப்பணக்கார வீதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.சாம்பவி 480 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு விவேக் வித்யாலயா பள்ளி மாணவி தாரணி 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.இவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம்வருமாறு:தமிழ் 98, ஆங்கிலம் 97. கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 என மொத்தம் 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண்கள் பெற்றதன் மூலம் கோவை மாவட்ட அளவில் முதலிடத்தையும் தாரணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவருடைய தந்தை ராமலிங்கம், பேரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தாயார் தங்கமணி கோவை சமூக நலத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். மாநில அளவில்மூன்றாம் இடம்பெறக் காரணமாக, தன்னை ஊக்குவித்த பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுக்கு மாணவி தாரணி நன்றியை தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் 94.58ரூ தேர்ச்சி
ஈரோடு ஜூன்.4-ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 94.58 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் 0.73 சதம் கூடுதலாகும். ( கடந்தஆண்டு தேர்ச்சி விகிதம் 93.85). அனைத்து வகை பள்ளிகள் என 294 பள்ளிகளிலிருந்து 30,516 மாணவ மாணவியர் தேர்வு எழுதியதில் 28,863 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஈரோடு பிவிபி பள்ளி மாணவி ஸ்வாதி சென்னியப்பன் 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடமும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் பள்ளியை சேர்ந்த டி.வினுமிதா, ஈரோடு வேதாத்திரி வித்யாலயா மாணவி எஸ்.ஷர்மிளா ஆகியோர் 495 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் இரண்டாமிடத்iயும் பிடித்துள்ளனர். ஈரோடு பிவிபி பள்ளி மாணவன் ஆர்.துரைசீனிவாசன், மாணவி ஏ.ஆர்.கார்த்திகா, என்.விஷ்ணுபிரியா, கொங்கு நேஷனல் பள்ளி மாணவன் பி.செந்தில்குமார் ஆகியோர் 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்துள்ளனர். அரசுப்பள்ளிகள்ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பிடம் பெற்றவர்கள் விபரம் வருமாறு. மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எஸ்.அபிநயா, துடுப்பதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கே.விஜயகுமார் , சீனாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சி.கார்த்திக் ஆகியோர் 484 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். தவிட்டுப்பாளையம், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தேவிப்பிரியா, வீரப்பன் சந்திரன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.காயத்திரி ஆகியோர் 482 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தை பிடித்தனர். பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி, டி.ருஜிதா, காசிப்பாளையம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கே.எஸ்.வளர்மதி, சீனாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி என்.நிவிதா ஆகியோர் 481 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மொத்தமுள்ள 294 பள்ளிகளில் 81 பள்ளிகள் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.