நாமக்கல், ஜூன் 4-தமிழகத்தில் தற்போது நிலவும் தட்பவெப்ப நிலையில் வெள்ளாடுகளை ஆட்டுக்கொல்லி நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக நாமக்கல் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படாததால், காற்றின் வேகம் கூடுதலாக இருந்தாலும் பகல், இரவு வெப்ப அளவுகள் உயர்ந்தே காணப்படும். இதனால், கோழிப் பண்ணைகளில் கோடை மேலாண்மையைத் தொடர்ந்து தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும். கோழியின நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகத்தில்கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கோழிகள் பெரும்பாலும் ஈரல்அயற்சி, மேல்மூச்சுக்குழாய்நோய்களினால் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.எனவே, பண்ணையாளர்கள் தீவனத்தை நன்றாகப் பரிசோதனை செய்து அளிக்க வேண்டும். மேலும், பண்ணை சுகாதாரத்தை கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி மேற்கொள்வதும் அவசியமாகும். இப்போது நிலவும் தட்பவெட்ப நிலையில் வெள்ளாடுகளை ஆட்டுக்கொல்லி நோய் தாக்கி கழிச்சலுடன் இறப்பதற்கான வாய்ப்புள்ளது. எனவே, இந்த நோய் பரவாமல் தடுக்க அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகளில் ஆடுகளுக்கு தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆமணக்கு சாகுபடி
தென்மேற்குப் பருவமழை காலமான ஜூன் மாதம் ஆமணக்கு சாகுபடி செய்ய மிகவும் ஏற்றத் தருணமாகும். இதற்காக நிலத்தைப் பண்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், மிகச் சிறந்த ரகமான ஒய்ஆர்சிஹெச் – 1 (மகசூல் ஏக்கருக்கு 1000 கிலோ வரை) ஆமணக்கு விதைகளை ஏத்தாப்பூர் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் கொள்முதல் செய்து கொள்ளலாம். இதுகுறித்த விவரங்களுக்கு 04282 -293526 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Leave A Reply