ஈரோடு, ஜூன் 4-ஈரோடு மின் மண்டலத்தில் வார மின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதால் தொழில் அமைப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக கடுமையான மின்வெட்டு என்பது அமல்படுத்தப்பட்டு வந்தது. இதிலும் தொழில் நகரங்களான கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் குறைந்தபட்சம் 8 மணி நேரமும், அதிகபட்சம் 14 மணிநேரத்திற்கும் மேலாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. இவை தவிர வாரந்தோறும் கட்டாய மின்விடுமுறை தினம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் வாரந்தோறும் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் வார மின் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த வார மின் விடுமுறை மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் துணி உற்பத்தி தொழிலை பொருத்தவரை நூல் உற்பத்தி ஆலை, காடா உற்பத்தி ஆலை, பிளீச்சிங் ஆலை, கேலன்டரிங் ஆலை, சைசிங் ஆலை உள்ளிட்ட 13 வகையான ஆலைகள் மிகவும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டன.
மேலும், தொழில் நெருக்கடியின் காரணமாக அதனைச் சார்ந்த உரிமையாளர்களும் தொழிலாளர்களும் பல்வேறுபாதிப்புகளை சந்தித்தனர்இந்நிலையில், தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதனால், மின் விநியோகம் ஒரளவிற்கு சீர் செய்யப்பட்டு கடந்த சில நாட்களாக வீடுகளுக்கு மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தொழில் நிறுவனங்களுக்கான வார மின் விடுமுறையை மின் வாரியம் வாபஸ் பெற்றுள்ளது. இந்த மின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஈரோடு தொழில் அமைப்பினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து ஈரோடு மாவட்ட துணி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவிக்கையில்: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அமல்படுத்தப்பட்ட அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் உற்பத்திச் செலவு இழப்பு, தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு இழப்புகளை சந்தித்தோம். மேலும் வார மின் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் நெருக்கடி இன்னும் அதிகரித்தது. இப்போது மின் விடுமுறை தளர்த்தப்பட்டுள்ளதால் ஆயத்த ஆடை தொழில் மேம்படும். மின் வெட்டு காரணமாக ஆயத்த ஆடை தொழிலில் 32 முதல் 42 சதவிகிதம் வரை இழப்பு ஏற்பட்டது. எனவே, இந்த இழப்பை சரிசெய்ய மத்திய, மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் மின்வெட்டு காரணமாக 30 சதவிகிதம் வரை உற்பத்தி குறைந்துவிட்டது. வங்கியில் வாங்கிய கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு சில நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. இருப்பினும் தற்போது, வார மின் விடுமுறைக்கு விலக்கு அளிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவிக்கின்றனர்.மேலும், தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவிக்கையில், மின் வாரியத்தில் இருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் துணியை பதனிட கிலோவுக்கு ரூ.20 செலவாகும்.
ஆனால், ஈரோடு மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட கடுமையான மின்வெட்டின் காரணமாக ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்தால் கிலோவுக்கு ரூ.39 செலவாகிறது.ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்தால் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 அதிகம் ஆகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தினமும் ரூ.500 கோடிக்கு பொருள்கள் உற்பத்தி செய்யப்படும். வார மின் விடுமுறை நாளில் தினமும் ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டு வந்தது. இனிமேல் இந்த இழப்பு குறையும் என்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: