ஆங்கிலத்திலும், தமிழிலும் தலா 3 பேர் சதம்
சென்னை, ஜூன் 4-தமிழகத்தில் திங்களன்று வெளியான 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வடிவத்தில் ஆங்கிலத்திலும், தமிழிலும் தலா 3 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத் துள்ளனர்.மாநில அளவில் முதலிடம் பிடித்த தஞ்சை மாணவன் ஸ்ரீநாத், ஈரோடு மாணவி தமன்னா சரோயா, சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி ஜனனி ஆகியோர் ஆங்கிலப் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.தமிழில், ஈரோடு மாவட்டம் ஈ.எச்.கே.என். பள்ளி மாணவர் சிபிசக்ரவர்த்தி, சென்னை ருக்மணி பள்ளி மாணவி நிவேதிதா, திருத்தணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் புவனேஸ்வர் ஆகியோர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.

ஜூன் 25ம் தேதி 10ம் வகுப்பு உடனடித் தேர்வுகள்
சென்னை, ஜூன் 4-பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வுகள் ஜூன் 25ம் தேதி துவங்கி ஜூலை 2ம் தேதி முடிகிறது.தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் உடனடித்தேர்வில் பங்கேற்கலாம். பள்ளி மாணவர்களாக இருந்தால் அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து, 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை, தேர்வுக் கட்டணத்துடன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும்.விண்ணப்பக்கட்டணமாக அனைத்து பாடங்களுக் கும் சேர்த்து ரூ.125ம் மெட்ரிக் மாணவர்களுக்கு ரூ.132 ம், கூடுதலாக ஒரு பாடத்திற்கு ரூ.50ம் செலுத்த வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வில் தவறியதாக வந்த தவறான தகவல் மாணவி தீயிட்டுத் தற்கொலை
திண்டுக்கல், ஜூன் 4-பத்தாம் வகுப்புத் தேர்வில் தவறிவிட்டதாக வந்த தவறான தகவலால் மன உளைச்சல் அடைந்த மாணவி, தீயிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.திண்டுக்கல் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த நாராயணன் – முருகம்மாள் தம்பதியின் மகள் காயத்ரி. திண்டுக்கல் அரசுப் பள்ளியில் படித்து வந்த இவர், 10ம் வகுப்புத் தேர்வு எழுதி முடிவுக்காகக் காத்திருந்தார். முடிவுகள் வெளியானதும், அவர் கணிதத்தில் 16 மதிப்பெண்கள் பெற்று தோல்வியைத் தழுவியதாக வந்த தகவலால் மன உளைச்சல் அடைந்து, மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.அதே நேரம், அவரது தாயார் இண்டர்நெட் மையத் துக்குச் சென்று அவரது மதிப்பெண்களைக் குறித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். அப்போது வீட்டில் இருந்து புகையாக வரவே, அதிர்ச்சி அடைந்து வீட்டைத் திறந்து பார்த்தார். அப்போது மகள் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இதனைக் கண்டு அவர் கதறி அழுதார்.மாணவி காயத்ரி 49,45,37,56,43 என மொத்தம் 230 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். இடையில் வந்த தவறான தகவலால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave A Reply

%d bloggers like this: