கோவை மாநகராட்சி: தொழில்நுட்ப ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
மே. பாளையம், ஜூன் 4-கோவை மாநகர தொழில்நுட்ப ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, கோவை மாநகராட்சி ஆணையாளர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கோவை மாநகராட்சி ஜவஹர்லால் நேரு நகர்புற புனரமைப்பு திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநகராட்சியின் அபிவிருத்தி திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்தவும் நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் மாமன்றத்தின் முழு ஒத்துழைப்புடன் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, தற்போது மாநகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்றுவருகிறது. மேலும், கோவை மாநகராட்சி 105 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலிருந்து 257 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாக விஸ்தரிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் நகர அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாநகர பொறியியல் பணிகள், மாநகர திட்ட மேம்பாடு, மாநகர குடிசைப்பகுதி மேம்பாடு, மாநகராட்சி மேம்பாடு, மாநகர சுற்றுப்புற சூழல் மேம்பாடு, மாநகர நிதித்துறை மேம்பாட்டுப்பணி, பாதாள பாதுகாப்பு துறை ஆகிய 7 துறைகளை உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த குழுவில் இடம்பெற கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும், தகுதி பெற்ற அனுபவமிக்க ஓய்வு பெற்ற மற்றும் தன்னார்வம் கொண்டவர்களிடமிருந்து விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மனமுவந்து, லாபநோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் செயலாற்றவேண்டும். இவர்கள் மாநகர அபிவிருத்தி திட்டங்களில் ஆலோசனைகளை வழங்கி ஒளிவு மறைவின்றி அதற்கான பொறுப்பேற்பவர்களாக இருக்க வேண்டும். இக்குழுவில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு நகர்புற புனரமைப்பு திட்டப் பிரிவில் அதற்கான விண்ணப்பப் படிவத்தினை பெற்று விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கோவை மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் அரசினர் ஐ.டி.ஐ.யில் சேர்க்கை அறிவிப்பு
திருப்பூர், ஜூன் 4-திருப்பூர் தாராபுரம் சாலை அரசு மருத்துவமனை எதிரில் செயல்படும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2012ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பிட்டர், எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக் மெக்கானிக் போன்ற என்ஜினியரிங் தொழிற்பிரிவுகளில் இரண்டு ஆண்டு பயிற்சியும், கம்ப்யூட்டர் எய்டெட் எம்ப்ராய்டரி, நீடில் ஒர்க்ஸ் பிரிவில் ஆறு மாத கால பயிற்சியும் பெறலாம். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் அண்டு ப்ரோகிராமிங் அசிஸ்டென்ட் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் (ஆங்கிலம்) தொழிற் பிரிவுகளில் ஓராண்டு காலப் பயிற்சியும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு துணி வெட்டுதல், தைத்தல் பிரிவில் ஓராண்டு காலப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.இங்கு சேர்ந்து பயில்வோருக்கு இலவச பஸ் பாஸ், இலவச சீருடை, இலவச காலணிகள், இலவச மடிக்கணினி மற்றும் அரசு உதவித்தொகை, விவசாயிகள் நலத்திட்ட உதவித்தொகை கிடைப்பதுடன், நூறு சதவிகித வேலைவாய்ப்பும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு சான்றிதழும் கிடைக்கும்.எனவே தொழிற்பயிற்சி நிலைய அலுவலகத்தில் ரூ.50 மட்டும் செலுத்தி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து ஜூன் 29ம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 0421 – 2429201 மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: