குன்னூர், ஜூ 4-குன்னூர் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரிபொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.குன்னூர் பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி பாரத்நகர். இப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகிக்கப்படமால் இருந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி அமைப்பிடம் பலமுறை முறையிட்டும் எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியை சேர்ந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தக்கோரி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், குடிநீர் முறையாக வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் பாரத்நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்
இதேபோல், திருப்பூர் மாநகராட்சி 52 வது வார்டு பகுதியில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுபாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில் தெரிவித்திருப்பதாவது,திருப்பூர் மாநகராட்சி 52வது வார்டுக்குட்பட்ட அமராவதிநகர்,திருக்குமரன்நகர், முத்தையன்நகர் பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.கடந்த காலத்தில் வீரபாண்டி ஊராட்சியாக இருந்து தற்போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இப்பகுதி, மாநகராட்சியால் புறக்கணிக்கபட்ட பகுதியாகவே இருந்து வருகிறது. இந்த பகுதியில் கடந்த ஓராண்டாகவே கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே, மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் பாரபட்சமின்றி குடிநீர் வழங்குவதோடு, இப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு ஒழுங்கின்றி பதிக்கபட்டுள்ள குழாய்களை முறைப்படுத்தி சீரான குடிநீர் வழங்கவேண்டும். மேலும் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, சாக்கடை மற்றும் பொது சுகாதாரத்தை காக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: