திருப்பூர்,ஜுன் 4-திருப்பூர் காவிலிபாளையம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கட்டபட்ட கழிப்பிடம் 4ஆண்டுகளாகியும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சி 14 வார்டுக்குட்பட்டது காவிலிபாளையம் கிராமம்.இப்பகுதியில் 60 க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் எந்தவித அடிப்படைவதிகளுமின்றி அவல நிலையில் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கைகளின் விளைவாக கடந்த 2008 ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து இப்பகுதியில் கழிப்பிடம் கட்டப்பட்டது. அன்றைய திருப்பூர் நகராட்சி நிர்வாகத்தால் டெண்டர் விடப்பட்டு ஓப்பந்தம் விடப்பட்டது. இதில் கழிப்பிடத்திற்கான தண்ணீர் வசதியை நகராட்சியால் செய்து கொடுக்கப்படாததால் ஓப்பந்தம் எடுத்தவர் அதைசெயல்படுத்தாமல் விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனால், இக்கழிப்பிடம் அப்பகுதி மக்கள் உபயோகிக்க முடியாத நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக பூட்டப்பட்டே கிடக்கிறது. இதன்காரணமாக அப்பகுதியை சேர்ந்த பெண்களும், வயதானவர்களும் இயற்கை உபாதைகளுக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave A Reply