ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய ஹாக்கி அணிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மலேசியாவில் நடைபெற்ற அஸ்லான் ஷா ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கலத்தை அடைந்துள்ளது. நியூஸிலாந்து தங்கப் பதக்கத்தையும் அர்ஜென்டினா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளன.வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியாவும் பிரிட்டனும் மோதின. பிரிட்டனுடன் இதற்கு முன்பு ஆடிய போட்டிகளிலும் இந்தியா தோற்றுள்ளது. இந்தியா அதனால் நடுக்கம் அடையவில்லை.இந்தியா 3-1 என்ற கோல்களில் பிரிட்டனைத் தோற்கடித்தது. இந்திய தாக்குதல் வீரர்கள் கூர்மையாக அடித்திருந்தால் இந்தியா அதிக வித்தியாசத்தில் வென்றிருக்க முடியும். முதல் 10 நிமிடங்களில் நட்சத்திர வீரர் சிவேந்திரா சிங் இரண்டு வாய்ப்புகளைத் தவறவிட்டார். அடுத்த பத்து நிமிடங்களில் மேலும் இரு வாய்ப்புகளை உத்தப்பாவும் சிவேந்திராவும் நழுவவிட்டனர். முதல்பாதி முடியும் வேளையில் பிரிட்டனுக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. அஸ்லி ஜேக்சன் அதைக் கோலாக மாற்றினார்.இந்தியா 43 வது நிமிடத்தில் கோலைச் சமன் செய்தது.
வேகத்துடனும், பந்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்தபடி திறமையுடன் முன்னேறிய உத்தப்பா, பிரிட்டனின் அரை வட்டத்தில் நுழைந்தவுடன் பந்தை சிவேந்திராவிடம் தள்ளிவிட்டார். சிவேந்திரா பந்தை வலையில் போட்டார். 52ம் நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரில் சந்தீப் சிங் கோல் அடித்தார். இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. கோலைச் சமன் செய்யும் முயற்சியில், பிரிட்டன் கோல்கீப்பரை அகற்றிவிட்டு முன்னணி வீரரைக் களம் இறக்கியது. 69ம் நிமிடத்தில் சந்தீப் சிங் அள்ளிப்போட்ட பந்தை பிரிட்டனின் அரை வட்டத்திற்குள் இருந்த துஷார் காண்டேகர் கோலுக்குள் தட்டிவிட்டார். இந்தியா 3-1 என வென்றது.பின்னர் நடந்த இறுதிப்போட்டியில், நியூஸிலாந்து 1-0 என்ற கோலில் அர்ஜென்டினாவை வென்றது. முதல் முறையாக அஸ்லான்ஷா போட்டியில் ஆடும் நியூஸிலாந்து முதல் ஆண்டிலேயே கோப்பையை வென்றது. அதற்குக் கிடைத்த முதல் பெனால்டிகார்னரை ஆன்டி ஹேவர்ட் கோலுக்குள் செலுத்தினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.