மே. பாளையம், ஜூன் 2-பெட்ரோல் விலையேற்றம் காரணமாக கூரியர் சர்வீஸ் கட்டணங்களும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவிற்கு ரூ.7.50 வரை உயர்த்தியது. இந்த திடீர் விலை ஏற்றத்தின் எதிரொலியாக மக்களின் அன்றாட பயன்பாட்டில் உள்ள பல பொருட்களின் விலை நேரிடையாகவும் மறைமுகமாகவும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், தற்போது தனியார் கூரியர் நிறுவனங்களின் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி உள்ளூர் கடித கவர்களுக்கு ரூ.5 வரையும், வெளியூர் கடித கவர்களுக்கு ரூ.10 வரையும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பார்சல் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது. 250 கிராமம் எடை கொண்ட பார்சலுக்கு ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அதனால் கிலோ ஒன்றுக்கு ரூ.40 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் வணிக நிறுவனங்களும், அதன் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெட்ரோல் விலை உயர்வை தாங்க முடியாமல் மக்கள் தவித்து வரும் நிலையில் கூரியர் போன்ற சேவை கட்டணங்களும் கண்டபடி உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் பகுதி கூரியர் ஏஜென்ட் கோபால் தெரிவிக்கையில்:நாட்டின் எந்த மூலைக்கும் விலாசம் எழுதி அனுப்பினாலும் அதனை விரைவாகவும், பாதுகாப்பாகவும் கொண்டு சென்று சேர்ப்பது எங்களது வேலை. இதற்கு வாகன பயன்பாடு மிக முக்கியம். ஊர் ஊராக, விரைவு வகை வேன்கள் மூலம் சேகரிக்கப்படும் கவர்களும் பார்சல்களும் அந்தந்த பகுதிக்கு இரவோடு இரவாக கொண்டு சேர்க்கப்படுகிறது. பின்னர் இவை உள்ளூரில் இரு சக்கர வாகனங்கள் மூலம் அந்தந்த விலாசங்களுக்கு விரைவாக எடுததுச் செல்லப்படுகிறது. இப்படி அனைத்து முக்கிய பணிகளும் வாகனங்களை மட்டுமே நம்பியிருப்பதால் பெட்ரோல் விலையேற்றம் எங்கள் தொழிலை கடுமையாக பாதிப்படைய வைத்துள்ளது. இதனால் கூரியர் கட்டணங்களை வேறு வழியின்றியே உயர்த்த வேண்டியதாகிவிட்டது. இந்த விலையேற்றம் காரணமாக எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து எங்கள் தொழிலும் தேக்கமடையவே செய்யும். எனவே பெட்ரோல் விலையை குறைக்க ஆளும் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றார்.

Leave A Reply

%d bloggers like this: