புதுதில்லி, ஜூன் 2- தொடர்ந்து நடந்து வரும் ரயில் விபத்துக்களில் ரயில்வே அமைச்சருக்குப் பொறுப்பு உண்டு என்றும், ரயில்வே அமைச்சகப் பணியைக் கவனிக்காமல் இருக்கும் அமைச்சரைத் தட்டிக்கேட்காமல், வெறும் பார்வையாளராக பிரதமர் இருந்துவிடக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- நாட்டில் தொடர்ந்து ரயில் விபத்துகள் நடைபெற்றுவருவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. கடைசியாக மே 31 அன்று ஹவுரா – டேராடூன் எக்ஸ்பிரஸ் உத்தரப்பிரதேசம் ஜான்பூர் மாவட்டத்தில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்துள்ளனர். விபத்தில் உயிர்நீத்தவர்களின் குடும்பங்களுக்கு அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இதற்கு ஒன்பது நாட்களுக்கு முன்புதான் மற்றொரு பெரும் விபத்து ஏற்பட்டது. மே 22 அன்று ஹம்பி எக்ஸ்பிரஸ், சரக்கு வண்டியுடன் மோதியதில் 25 பயணிகள் பலியாகினர். 55 பேர் காயமுற்றனர். அதற்கு முன்பு மே 6 அன்று மும்பையிலிருந்து புறப்பட்ட பெரோஸ்பூர் – பஞ்சாப் மெயில் ரோஹ்டாக் என்னுமிடத்தில் ஆறு பெட்டிகள் தடம் புரண்டதில் 29 பேர் காயமடைந்தனர். இப்படி ரயில்வேயில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருவதற்கு ரயில்வே துறைக்குப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் முகுல் ராய்க்குப் பொறுப்பு உண்டு. ஆனால் அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் விவகாரங்கள் மற்றும் மேற்கு வங்க மாநில நடவடிக்கைகளிலேயே முழுவதும் ஈடுபட்டிருப்பதுபோல் தெரிகிறது. ரயில்வே அமைச்சரும் மம்தா பானர்ஜியும் ரயில் விபத்துக்களுக்கு சதி வேலை காரணம் என்று கூறி, ரயில்வே நிர்வாகம் அடிப்படைப் பாதுகாப்பு நடவடிக்கைகள்கூட எடுக்கப்படாமல் மிக மோசமான நிலையில் இருந்துவரும் உண்மையை மறைத்துவிட முயல்கிறார்கள். ரயில்வே அமைச்சர் தன் கடமையைச் செய்யாமல், கடமையிலிருந்து தவறியிருப்பதைத் தட்டிக்கேட்காமல் வெறும் பார்வையாளராக மட்டும் பிரதமர் இருந்துவிடக்கூடாது.

Leave A Reply

%d bloggers like this: