சேலம், ஜூன் 2-தொடர்ந்து 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் கூலி உயர்வு பிரச்சனையில் தீர்வு எட்டப்படவில்லை. எனவே சேலம் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தீர்வுகாண வலியுறுத்தி ரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். சேலம் ரயில்வே கூட்செட்டிலிருந்து, மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சரக்கு மூட்டைகளை கொண்டு சென்று இறக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.சேலம், ரயில்வே கூட்செட் தொழிலாளர் சங்கமும் சி ஆண்ட் எப் ஏஜெண்ட்ஸ் ஆசோசியேசனும் கடந்த முறை போட்ட கூலி ஒப்பந்தம், கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதியோடு முடிவடைந்து விட்டது. இம்மாதம் 1ந் தேதியிலிருந்து கூலி உயர்வு வழங்க வேண்டும். புதிய கூலி உயர்விற்கான கோரிக்கை பட்டியல் தொழிற் சங்கத்தின் சார்பில் மார்ச் மாதமே நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தொடர்ந்து 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே சி அண்ட் எப் நிர்வாகத்தினர் ரயில்வே வேகன்களில் வரும் சரக்குகளை நிறுத்திவிட்டனர். இதனால் சிமெண்ட், நெல், சர்க்ரை, பருப்பு, உரம் ஆகியவை வருவது முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செயற்கையாக விலைவாசி ஏறும் என்பதுடன், தொழிலாளர்களை பட்டினி போட்டு பணியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனவே இப்பிரிச்சினையில் சேலம் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.சி. கோபிகுமார், சுமைப்பணி மாவட்டச் செயலாளர் ஏ. கோவிந்தன், கூட்செட் சங்கப் பொருளாளர் பி. சக்திவேல் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் சங்க நிர்வாகிகள் பி. தங்கம் கே. எம். மாரிமுத்து, கே. மூர்த்தி ஆர். சதாசிவம் மற்றும் தொழிலாளர்கள் 600 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: