கோவை, ஜூன் 2-கல்விக் கட்டணக்குழு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை நடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தினார்.கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை அமல்படுத்தக் கோரி கோவை மாவட்ட மாணவர் நல பெற்றோர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வெள்ளியன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவர் ஆர். மணிமோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி. தெய்வேந்திரன் வரவேற்றுப்பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பங்கேற்று பேசியதாவது:தனியார் பள்ளிகள் நிர்ணயித்த கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்கள் தண்டிக்கப்பட்டனர். இம்மாணவர்கள் தனி இடத்தில் அமரவைக்கப்பட்டு, வகுப்பறையில் பொருளாதார தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது.
இப்பிரச்சனைக்கு தீர்வுகான வலியுறுத்தியும், சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரியும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. பின்னர். உச்சநீதிமன்றம் வரை சென்று வெற்றிபெற்றோம். இப்போராட்டம் இந்தியாவிற்கே முன் மாதிரியாக அமைந்தது. பின்னர், கூடுதல் கல்விக் கட்டணத்தை வசூலிக்க தனியார் பள்ளிகள் தந்திரமாக “எக்ஸ்ட்ரா கரிக்குலர்” முறையை கொண்டுவந்து அரசு கல்விக்கட்டணக் குழு நிர்ணயித்ததைவிட கூடுதலாக வசூல் செய்து வருகிறது. இவர்கள் கூறும் கட்டணத்தை கட்ட மறுக்கும் பெற்றோர்கள், மாணவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் பள்ளி நிறுவனங்கள் ஈடுபடுகிறது. இப்பள்ளிகள் மீது அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் எம். ஆறுமுகம், இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் கே. கனகராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். சந்திரன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் ஜே. ஜேம்ஸ், பாரதிய ஜனதா கட்சி தலைவர் அர்ஜின் சம்பத் உள்ளிட்டோர் பேசினார்கள். இதில் மாணவர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: