வல்லரசு நாடுகளின் வல்லரசு என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டு, வளரும் நாடுகளில் அத்துமீறி நுழைந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் பல்வேறு அத்துமீறல்களை மேற்கொண்டு வரும் அமெரிக்காவில், கல்விக்காக கடன் வாங்கிய மாணவர்களில் பெரும்பாலானோர் தங்களது உயர்கல்வியை தொடர முடியாமல் பாதியிலேயே விட்டுச் செல்வதால், கடனாளியாகும் அவலநிலையில் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அனைத்து துறைகளிலும் முன்னோடியாக விளங்குகிறோம் என்ற பெயரில் பல்வேறு உளவு வேலைகளை மேற்கொண்டு வரும் அமெரிக்காவில் கடந்த 2008ம் ஆண்டில்கடுமையானபொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இது அமெரிக்காவை மட்டுமின்றி உலக நாடுகளையே ஆட்டிப்படைத்தது. இது இன்னும் பல நாடுகளில் எதிரொலித்துக் கொண்டிருப்பது நிதர்சன உண்மை. ஆனால், நாங்கள் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் அந்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்களின் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது.அமெரிக்காவில் பெரும்பகுதி மாணவர்கள் தங்களது உயர்கல்விக்காக வங்கி உள்ளிட்ட கடன் நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று படித்து வருகின்றனர். இதில், கடந்த 2009ம் ஆண்டு உயர்கல்வி பட்டப்படிப்பிற்காக கடன் வாங்கிய மாணவர்களில் சுமார் 30 சதவிகிதம் பேர் பல்வேறு காரணங்களுக்காக கல்லூரியிலிருந்து இடையிலேயே நின்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கல்லூரிப் படிப்பை இடையிலேயே விடுவதால் அவர்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. தங்களது வாழ்க்கைய நடத்த வேண்டும் என்ற நெருக்கடியின் காரணமாக, அவர்கள் குறைந்த அளவு வருமானத்திற்கு வேலைக்குச் செல்கின்றனர். இதனால், கல்விக்காக தாங்கள் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.இம்மாணவர்கள் படிப் பை பாதியிலேயே விட்டுச்செல்வதற்கு அதிகரித்து வரும் கல்விக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், பெரும்பாலும், அமெரிக்காவில் உயர்க்கல்வியை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான அரசின் பொதுக்கொள்கையை உருவாக்குவதில் உள்ள குளறுபடிகளே முக்கியமாக இருப்பதாக பல ஆண்டுகளாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. உயர்கல்வியை ஊக்குவிக்கும் அரசு, அதனை மாணவர்களிடம் கொண்டு செல்ல தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
அரசுக் கல்லூரிகளோடு ஒப்பிடுகையில் வர்த்தக ரீதியிலான இலாப நோக்கத்தோடு இயங்கி வரும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் நிலை இதை விட மோசமாகவுள்ளது. இதனால் மாணவர்கள், கல்வியைப் பெறமுடியாமல் தவிப்பதோடு, கடனாளிகளாக மாறி வருகின்றனர்.அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் உயர்கல்விக்காக கடன் வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் ஒரு மாணவரின் சராசரி கடன் 23 ஆயிரம் டாலர்களாகும். அவ்வாறு கடன் பெறும் மாணவர்களில் 10 சதவிகிதம் பேர் 50 ஆயிரம் டாலர்களுக்கும் மேல் கடன் பெறுகிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இவர்களில் 11 சதவிகிதம் பேர் வர்த்தக ரீதியான தனியார் கல்லூரிகளில் சேர்ந்து கல்வி பயில்கிறார்கள். மேலும், இந்த தனியார் கல்லூரிகள் 25 சதவிகித அளவிற்கு அரசு வழங்கும் மானியங்களையும் பெறுகின்றன. இங்கு கடந்த 10 வருடங்களில் அரசு கல்லூரிகளில் உயர்கல்வி பட்டத்திற்கான செலவு 72 சதவிகித அளவிற்கு உயர்ந்துள்ளது. இச்செலவுசேவைநோக்கிலான தனியார்கல்லூரிகளில்24சதவிகித அளவிற்கு உயர்ந்துள்ளது. இதன்மூலம், கல்லூரிப் படிப்பை பாதியிலே விடும் மாணவர்கள் கடன் தொகை மட்டும் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் என வாடிக்கையாளர் நிதி பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடன் வாங்கி அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் இரண்டு மடங்கு மாணவர்களும், சேவைநோக்கில் இயங்கி வரும் தனியார் கல்லூரி மாணவர்களில் மூன்று மடங்கினரும் கடனை திருப்பிச் செலுத்துவதில்லை என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அமெரிக்காவில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக அந்நாடு சிக்கன நடவடிக்கையாக 24 வருடங்களில் இல்லாத அளவிற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கான நிதியினை குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மாணவர்களுக்கான கடன் நிபுணரான மார்க் கான்ட்ரோ விட்ச் கூறுகையில், பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களின் கடன் அளவு பொது கல்லூரிகளை விட வர்த்தக ரீதியிலான தனியார் கல்லூரிகளில்தான் அதிகமாக உள்ளதாக கூறினார்.அமெரிக்காவில் அதிகரித்து வரும் கல்விக் கட்டணங்களால், கல்லூரிப்படிப்பை தேர்வு செய்வது மற்றும் அதற்கான செலவினங்களை பூர்த்தி செய்வது குறித்த பெரும் அச்சம் மாணவர்களிடையே எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: