மலேசியாவில் நடைபெற்று வரும் அஸ்லாம் ஷா ஹாக்கி போட்டியின் இறுதி நேரமான 1.27 வினாடிகள் இருந்தபோது, எஸ்.வி.சுனில் அடித்த கோலால் இந்தியா 2-1 என்ற கோல்களில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்தியா வெண்கலம் பெறுவதற்கு வாய்ப்புகள் தோன்றியுள்ளன. மற்ற போட்டிகளின் முடிவுகளுக்காக இந்தியா காத்திருக்கிறது.மற்ற போட்டிகளில் கொரியாவும் பிரிட்டனும் 1-1 எனச் சமன் செய்துகொண்டன. நியூசிலாந்து 4-1 என மலேசியாவைத் தோற்கடித்தது. இந்திய தற்காப்பில் பிரேந்திரா லக்ரா கோட்டையாக நின்றார். பரத் செட்ரி மிகச் சிறப்பாக கோல்கீப்பிங் செய்தார். இடதுபாதி தற்காப்பாளர் கோத்தாஜித் சிங் நன்றாக ஆடினார்.69ம் நிமிடத்தில் பாகிஸ்தான் வீரரிடமிருந்து பறித்த பந்தை பிரேந்திரா முன்னால் விரைந்து அனுப்பினார். அதைச் சேகரித்த சர்தாரா சிங் பந்துடன் அம்பென முன்னேறினார். பாகிஸ்தான் வளையத்துக்குள் நின்ற சுனிலிடம் எதிரணியின் தற்காப்பை ஊடுருவி பந்தை அவர் அடித்தார். பந்தை நிறுத்தாமல் சுனில் அடித்த கோல் இந்திய வீரர்களிடம் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.இந்திய-பாக். அணிகளுக்கிடையே நடைபெற்ற 152வது போட்டி இது. இரு அணிகளும் ஆடிய செழுமிய ஆட்டம் என்று கூற முடியாது. மழையால் ஈரமாகியிருந்த ஆடுகளத்தில் நடந்த போட்டி சொதப்பலாக இருந்தது. பாகிஸ்தான் வீரர்கள் இந்திய தற்காப்பின் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். வலது சிறகில் உமர்பட்டாவும், நடுவில் ஹசீம் கானும் இந்திய அணியை உறுத்திக் கொண்டேயிருந்தனர். முதல்பாதி முடியும் வேளையில் கிடைத்த பெனால்டி கார்னரில் சந்தீப் சிங் கோல் அடித்தார். ஆட்டத்தின் 59ம் நிமிடத்தில் கிடைத்த பெனால்டிகார்னரை, அமீர் சோகாயில் கோலாக மாற்றினார். இரு அணிகளும் 1-1 எனச் சமனாக இருந்தன. இரு அணிகளும் வெற்றி பெறப் போராடின. 67ம் நிமிடத்தில் பெனால்டிகார்னரை இந்தியா தவறவிட்டது. 69ம் நிமிடத்தில் இந்தியாவின் வெற்றிக்கோல் கிடைத்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.