சேலம், ஜூன் 1-சேலம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்களை கண்டித்து விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்த தினக்கூலி ரூ.132 வழங்கக்கோரியும், சட்டப்படியான சலுகைகளை வழங்காமல் தொழிலாளர்களை கொத்தடிமைகளை நடத்தி வரும் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்தும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எம்.வேல்முருகன் தலைமை வகித்தார். இதில் மாநில பொதுச் செயலாளர் டி.மணி, மாவட்டத்தலைவர் வி.கே.வெங்கடாசலம், விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் டி.பி.ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதேபோல், மேட்டூர் வட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், சூரப்பள்ளி, இருப்பாளி , ஆடையூர், பக்கநாடு ஆகிய ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டப் பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு கடந்த 3 வார காலமாக ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. நங்கவள்ளி ஊராட்சியின் நடவடிக்கையை கண்டித்தும், நிலுவையில் உள்ள ஊதியத்தை தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்கக் கோரியும் ஜலகண்டாபுரம் மத்திய ஸ்டேட் வங்கி முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.இந்த மறியலுக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். மறியல் போராட்டத்திற்கு பிறகு தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஊதியம் முழுவதுமாக வழங்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: