தி.கோடு, ஜூன் 1-திருச்செங்கோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழந்ததையடுத்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.திருச்செங்கோடு அருகிலுள்ள நல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (24). இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் பரமத்தி வேலூர் வட்டம் ராமதேவம் அருகிலுள்ள வடிவேலம்பாளையத்தில் உள்ள கணேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தேவஸ்ரீ (6), பூபாலன்(2) என்ற குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் மகேஸ்வரி அவதிப்பட்டு வந்தார். மேலும் சில நாட்களாக உதிரப்போக்கு அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, திருச்செங்கோட்டிலுள்ள கிருஷ்ணா எனும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றனர். அங்கு கருப்பையில் கட்டி இருக்கிறது எனவும், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் லேப்ராஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை செய்யலாம் என தெரிவித்தனர்.
இதன்படி கடந்த மே 30ம் தேதி இரவு 11 மணிக்கு மகேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சை முடித்த நான்கு மணி நேரத்தில் மகேஸ்வரி வயிற்று வலியால் துடித்தார். அப்போது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் அதிகமாக ரத்தப் போக்கு காணப்பட்டது. உடனடியாக இதுகுறித்து பணியில் இருந்த செவிலியர்களிடம் கூறிய போது, ஆபரேசன் செய்தால் அப்படித்தான் இருக்கும் என அலட்சியமாக கூறியுள்ளனர். ஆனால், நேரம் செல்ல மகேஸ்வரிக்கு வலி அதிகமானது. இதனையடுத்து, செயற்கை சுவாசக் கருவியுடன் மகேஸ்வரியை மே 31ம் தேதி மாலை 6 மணியளவில், ஈரோட்டிலுள்ள கேஎம்சிஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர், அங்கு சென்ற சில மணி நேரங்களில் மகேஸ்வரி இறந்துவிட்டதாக கேஎம்சிஹெச் மருத்துவர்கள் கூறினர்.இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு மகேஸ்வரியின் உடல் கொண்டு வரப்பட்டது. பின்னர், இதுகுறித்து மகேஸ்வரியின் கணவர் கணேசன், திருச்செங்கோடு காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்தார். அதில், மகேஸ்வரியின் உயிரிழப்புக்கு, கிருஷ்ணா மருத்துவமனை மருத்துவரின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறியுள்ளார். இதற்கிடையே, மகேஸ்வரி இறந்தது குறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். பின்னர், தனியார் மருத்துவமனைக்குச் சென்ற அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், மருத்துவமனையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர்.இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மார்க்சிஸ்ட் கட்சியினர், மகேஸ்வரியின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, விடியோ பதிவுடன் மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், மகேஸ்வரியின் இறப்புக்குக் காரணமான மருத்துவமனையை இழுத்து மூட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கான போதிய வசதிகள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் இல்லாததால், மகேஸ்வரியின் உடல் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் பெண் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

%d bloggers like this: