சேலம், ஜூன் 1-பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து சேலத்தில் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் போன்ற எதிர்ப்பியக்கங்கள் நடைபெற்றன. சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள ஆற்று பாலத்தில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் லோகநாதன் தலைமையில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் முழக்கங்களை எழுப்பினர். இதன்பின், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிஐடியு சங்க தலைவர் ரவி தலைமையில் பூலாம்பட்டி பகுதி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சரவணன், குப்புராஜ், ராஜகோபல் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சிபிஎம், சிபிஐ கட்சிகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகர செயலாளர் கே.பெருமா, சிபிஐ ஒன்றியச் செயலாளர் ஏ.ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர் கே.பி.கோபிகுமார், எம்.ரெங்கசாமி, கே.காளிதாஸ், சிபிஐ சார்பில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கே.சாமிநாதன், நகர செயலாளர் எஸ்.நடராஜன் மற்றும் விவசாய சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் டி.ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகினர்.

Leave A Reply

%d bloggers like this: