மக்களுக்கு வழங்கும் அரிசியை குறைக்கச் சொல்வதா?சிஐடியு கண்டனம்
திருப்பூர், ஜூன் 1-ரேசன் கடைகளில் மக்களுக்கு வழங்கும் விலையில்லா அரிசியை 60 சதவிகிதம் அளவு மட்டும் வழங்க வேண்டும் என ரேசன் கடை விற்பனையாளர்களை அதிகாரிகள் மிரட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சிஐடியு திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.சிஐடியு கூட்டுறவு பணியாளர் சங்க மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டம் சங்கத் தலைவர் கே.அபுபக்கர் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், சங்கச் செயலாளர் கௌதமன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் ரேசன் கடை விற்பனையாளர்களை அதிகாரிகள் மிரட்டுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் உணவு கடத்தல் தடுப்பு காவல் துறையினர் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது பொய் புகார் கூறி கைது செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சலுகைகளை அமல்படுத்த வேண்டும். மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் மளிகை, மாவு, ரவை, வெங்காயம், அரிசி சிப்பம் வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 15ம் தேதி இணைபதிவாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருப்பூர்:என்.எல்.சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஜூன் 1நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கள் சார்பில் புதனன்று திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் 13 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், சம ஊதியம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 40 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இப்பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தியும், இத்தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் திருப்பூரில் மத்திய தொழிற்சங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டதிற்கு ஐஎன்டியுசி செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். இதில் சிஐடியு சார்பில் மாவட்ட தலைவர் உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், ஏஐடியுசி சார்பில் மாவட்டச் செயலாளர் சி.பழனிச்சாமி, காளியப்பன், எல்பிஎப் சார்பில் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், எம்எல்எப் சங்கத்தின் பொதுச்செயலாளர் முத்துகுமாரசாமி, எச்எம்எஸ் மாவட்ட பொதுச்செயலாளர் காளியப்பன், பிஎம்எஸ் மாவட்ட பொதுச்செயலாளர் சந்தானம் ஆகியோர் உரையாற்றினர். இதில் அனைத்து தொழிற்சங்களை சார்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மின் விபத்தில் உயிரிழந்தஊழியர்களுக்கு நிவாரண நிதி! மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
சேலம், ஜூன் 1-சேலம் திட்டக்கிளையின் மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் மின்விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில், சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், மின் ஊழியர் மத்திய அமைப்பு சேலம் திட்டக்கிளை தலைவர் பி.கருப்பண்ணன், இணைச் செயலாளர் வி.ரகுபதி மற்றும் பாதிக்கப்பட்ட மின் ஊழியர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். இம்மனுவில், சேலம் மின்பகிர்மான வட்டத்தில் பணியாற்றி மின்விபத்தில் உயரிழந்த 10 மின் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் சிறப்பு நிவாரண நிதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், இதுகுறித்து, பாதிக்கப்பட்டோரின் கோரிக்கை மனுவை முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு உடனடியாக அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: