கோவை, மே 31-தொழில்நுட்ப திட்டப்பணிகளை தனியார்வசம் ஒப்படைப்பதை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு தொழில்நுட்ப ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோவையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழக அரசு தொழில்நுட்ப துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை முழுமையாக நிரப்பிட வேண்டும். கல்வித் தகுதியின் அடிப்படையில், அடிப்படை ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். தொழில் நுட்பக்கல்வி பெற்று பணிபுரிபவர்களை அரசாணையில் திறனற்றவர் என குறிப்பிடப்பட்டுள்ளதை ரத்து செய்து திறன் மிகு உதவியாளர் நிலை இரண்டு என தரம் உயர்த்தி ஊதியம் வழங்க வேண்டும்.
திட்டப் பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தொழில் நுட்ப ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் செவ்வாயன்று மாலை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் இராம. இரவிகுலதிலகம் தலைமை வகித்தார். மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் நெடுஞ்சாலைத்துறை எஸ்.நடராஜன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கோவை மாவட்டத் தலைவர் எஸ்.சந்திரன், மாவட்டச் செயலாளர் எஸ்.மதன் தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் டி. சிவஜோதி, தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க நிர்வாகி சரவணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட நிதி காப்பாளர் எஸ்.குமார் நன்றி தெரிவித்துப் பேசினார். முன்னதாக பி. இளங்கே வரவேற்றுப் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: