கோவை, மே 31 -கோவையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் போலி நிருபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவையில் போலி பத்திரிகையாளர்கள் நடமாடுவதாகவும், போலியான இதழ்கள் நடத்துவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதழ்கள் வெளியிட மத்திய அரசின் செய்தி ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் இந்திய செய்தித்தாள் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து ஆர்.என்.ஐ எண் பெற வேண்டும். மேலும், செய்தியாளர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் பொதுமக்கள் மற்றும் வணிகர்களை மிரட்டி பணம் பறிப்பது, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், செய்தி நிறுவனங்கள் மற்றும் செய்தியாளர்கள் அல்லாத வாகனங்களில் ‘பிரஸ்’ எனும் ஸ்டிக்கர் ஒட்டவதும் குற்றமாகும். அவ்வாறு வாகனங்களில் பிரஸ் எனும் ஸ்டிக்கர் ஒட்டி தவறான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply