திருப்பூர், மே 30-திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கும் தமிழக அரசின் திட்டத்தின் கீழ் 49 இளைஞர்களுக்கு ரூ.1 கோடியே 48 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.யூ.ஒய்.இ.ஜி.பி. எனப்படும் இத்திட்டத்தில் உற்பத்தி தொழிலில் ஈடுபட ரூ.5 லட்சம், சேவை தொழிலுக்கு ரூ.3 லட்சம், வியாபாரத் தொழிலுக்கு ரூ.1 லட்சம் வரை கடனுதவி அனுமதிக்கப்படுகிறது. இதில் 15 சதவிகித தொகை அரசு மானியமாக வழங்கப்படும். இதன்படி செவ்வாயன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தின்போது 49 இளைஞர்களுக்கு இந்த கடன் தொகை வழங்கப்பட்டது. அரசு மானியமான 22 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் சம்பந்தப்பட்ட தொழில் முனைவோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.இந்த கடன் பெற்றோர் பேப்பர் கப், கோன் வைண்டிங், விசைத்தறி, ஹாலோ பிளாக், பாக்குமட்டை தட்டு, புகைப்பட ஸ்டுடியோ, சீட்கவர், ஆயத்த ஆடை தயாரிப்பு, ஜெராக்ஸ்,சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுதல், வாட்டர் சர்வீஸ், பனியன் துணி நூல் பிரித்தல், அச்சகம், உணவகம், அழகு நிலையம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட உள்ளனர்.இவர்கள் தொழிலில் சிறந்து வெற்றி பெற மாவட்ட ஆட்சியர் வாழ்த்துத் தெரிவித்தார்.

Leave A Reply