போத்தனூர், மே 30-கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் நடந்து வந்த வியாபாரியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி, ரூ. 9.25 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் கத்தியுடன் இருந்ததால், பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கோவையில் மத்திய ரயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக மிகவும் பரபரப்பாக இயங்கி வருவது போத்தனூர் ரயில் நிலையம். இவ்வழியாக பல ஊர்களுக்கு ரயில்கள் செல்வதால், இங்கு தினசரி கூட்டம் அதிகமாக இருக்கும். திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரன்பட்டியைச் சேர்ந்த வெல்ல வியாபாரி ஜாகிர் உசேன் (46). இவர், கேரளாவிற்கு அதிக அளவில் வெல்லத்தை விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், கேரளாவில் வெல்லம் விற்பனை செய்த பணத்தை ஒரு சூட்கேசில் எடுத்துக் கொண்டு புதனன்று காலை 6.15 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தில் இறங்கி தனது ஊருக்கு செல்வதற்காக வெளியே வந்து கொண்டிருந்தார். டிக்கெட் வழங்கும் இடத்திற்கு வந்தபோது, சுமார் 4 பேர் ஓடி வந்து ஜாகிர் உசேனின் கண்ணில் மிளகாய் பொடியைத் தூவினர். இதனால் நிலைகுலைந்த அவரது காலில் ஒருவன் அரிவாளால் வெட்டினான். பின்னர், அவர்கள் ஜாகிர் உசேனிடமிருந்த சூட்கேசை பிடுங்கிக்கொண்டு ரயில்வே பிளாட்பாரத்தில் ஓடினர். கொள்ளையர்கள் கையில் கத்தியுடன் ஓடிவருவதைக் கண்ட பயணிகள் பீதியடைந்தனர். நீண்டதூரம் ஓடிய அவர்கள், ரயில்வே பிளாட்பாரத் தடுப்பை தாண்டிக் குதித்து, தொலைவில் நிறுத்தியிருந்த கேரள பதிவு எண் கொண்ட வெள்ளை நிற சைலோ காரில் ஏறி தப்பியோடினர். ஜாகிர் உசேன் பணம் கொண்டு வருவதை அறிந்த கும்பல்தான் இச்செயலை ஈடுபட்டுள்ளனர்.பின்னர், ஜாகிர் உசேனுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இதுகுறித்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக, இத்தகவல்கள் வயர்லெஸ் மூலம் அனைத்து சோதனைச் சாவடிகளுக்கு அளிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜாகிர் உசேன் தெரிவிக்கையில், எப்போதும் பணம் வசூலித்து டிராவல்ஸ் பஸ்சில் தான் வருவேன். இன்றுதான் ரூ. 9.25 லட்சத்துடன் ரயில் மூலம் தலசேரியிலிருந்து போத்தனூர் வந்தேன். நான் பணத்துடன் ரயிலில் வருவதை அறிந்த சிலரே இதனைச் செய்துள்ளனர் என்றார்.இதுகுறித்து பயணிகள் தெரிவிக்கையில், ரயில் நிலையத்தில் திடீரென 4 பேர் கத்தியுடன் வந்ததைக் கண்டதும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். கொள்ளையர்களிடமிருந்து அவரைக் காப்பாற்ற முயன்றபோது, கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டினர். இதற்கு முன் இதுபோன்ற கொள்ளைச்சம்பவங்கள் கோவை ரயில்நிலையங்களில் நடந்ததே இல்லை என்றனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்வது குறித்து ரயில்வே மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாரிடையே குழப்பம் ஏற்பட்டது. ரயில்நிலையத்தில் இச்சம்பவம் நடந்திருப்பதால், ரயில்வே போலீசாரே வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. பின்னர், ரயில்வே இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்தார்.சம்பவம் நடந்த இடத்திற்கு ரயில்வே டிஐஜி தினகரன் நேரில் சென்று பார்வையிட்டார். ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் துணிந்து கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ரயில்நிலையத்தில் கத்தியால் தாக்கி கொள்ளைச்சம்பவம் நடைபெற்றது பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.