பெட்ரோல் விலை அதிகரிக்கப்படும்போதெல்லாம் மத்திய அரசு ஒப்பிக்கும் காரணம். ‘டாலர் மதிப்பு கூடிடுச்சு!’ இந்த முறை நடந்துள்ள அநியாய விலையேற்றத்துக்கும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இதே காரணத்தைச் சொல்கிறார்கள்.அமெரிக்க டாலருக்கும் பெட்ரோல் விலைக்கும் என்ன சம்பந்தம்? சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் ஜோதி சிவஞானத்திடம் கேட்டோம். ‘அமெரிக்கா தன் நாட்டு கரன்சியான டாலரிலேயே உலகம் முழுக்க பெட் ரோலிய விற்பனை நடக்க வேண்டும் என்ற நிலைமையை 1970களில் உருவாக்கியது. இதற்காக வளைகுடா நாடுகளில் பெரும்பான்மையான வற்றைத் தன்வசப்படுத்தியது.
இதனால் பல நாடுகள் பெட்ரோல் கொள்முதலுக்காகவே அமெரிக்க டாலர்களை மேலும் மேலும் வாங்கி இருப்பில் வைத்துக் கொண்டன. ‘நம் மண்ணில் கிடைக்கும் பெட்ரோலை அமெரிக்காவின் நிபந்தனைகளின்படி ஏன் விற்க வேண்டும்?’ என்று ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் கேட்க வேண்டிய கேள்வியை தனி நபராக ஈராக்கின் அன்றைய அதிபர் சதாம் உசேன் எழுப்பினார். டாலரைப் புறக்கணித்து, யூரோ மதிப்பில் கச்சா எண்ணெய்யை விற்கவும் தொடங்கினார். அடுத்த சில வருடங்களிலேயே ஈராக் உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டு, பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானது. அனைத்துக்கும் காரணமாக சதாம் உசேன் முன்னிறுத்தப்பட்டு, அவர் தூக்கிலிடப்பட்டார். அமெரிக்காவின் இப்போதைய தலைவலி ஈரான். இதுவும் எண்ணெய் வளம் நிறைந்த, இன்னொரு நாட்டின் நாட்டாமைத்தனத்தை விரும்பாத தலைமையைக் கொண்ட நாடு. இன்று ஈரான் தன்னிடமுள்ள கச்சா எண்ணெய்யை ஐரோப்பிய நாடுகளின் கரன்சியான யூரோவில் விற்கும் நடவடிக்கையில் இறங்கிவிட்டது. தனக்கு எதிரான ஈரானை உலகுக்கே எதிரான நாடாகக் கட்டமைக்கும் வேலைகளை அமெரிக்காவும் ஆரம்பித்துவிட்டது.ஈரான் தன்னிடமுள்ள கச்சா எண்ணெய்யை இந்திய ரூபாய் மதிப்பிலேயே நமக்கு விற்பதற்குத் தயாராக இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ‘ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது’ என்று அறிவுறுத்திவிட்டுச் சென்றுள்ளார். இது நம் நாட்டின் இறையாண்மையையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு செயல். ஆனாலும், மத்திய அரசு அதை அனுமதித்தது. அவரது அறிவுரைப்படி கச்சா எண்ணெய்யை அமெரிக்க டாலரின் மதிப்பில் வாங்குவதற்குத் தான் இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள்.டாலரின் மதிப்போ ரூபாயின் மதிப்பை ஏறி மிதித்து நசுக்குவது போல கூடிக்கொண்டே போகிறது. எனவே, கச்சா எண்ணெய்யை ரூபாயின் மதிப்பிலோ யூரோவின் மதிப்பிலோ வாங்குவதுதான் நம் நாட்டின் கருவூலத்துக்கு நல்லது.
50 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளுக்கு 56 ரூபாய் செலவழிப்பது புத்திசாலித்தனமல்ல என்பதைப் பாமரர்கள் கூட சொல்லிவிடுவார்கள். டாலரில் நாம் பெட்ரோல் வாங்கும் போது இதுதான் நடக்கிறது. ஈரானிடம் எண்ணெய் வாங்கினால் அது வெறும் வணிக நடவடிக்கை மட்டுமே. அமெரிக்க கரன்சியில் வாங்கினால், அமெரிக்கா நம் நாட்டின் அரசியல் கொள்கைகளில் தலையிட நாம் அனுமதி கொடுப்பது போலத்தான். ஆனாலும், மத்திய அரசு அதை கச்சா எண்ணெயை டாலர் மதிப்பிலேயே தொடர்ந்து வாங்கி, நாட்டையும் நம்மையும் நஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறது.இன்றுள்ள சூழலில் டாலருக்கு எதிரான மாற்று வழிகள் மட்டும்தான் பெட் ரோல் விலையைக் கட்டுப்படுத்தும். முதல் வழி, டாலரின் ஆதிக்கத்தால் கீழிறங்கியுள்ள ரூபாயின் மதிப்பைத் தூக்கி நிறுத்த வேண்டும்.அமெரிக்காவும் அமெரிக்க ஆதரவு சக்திகளும் அவிழ்த்துவிடும் பிரச் சாரங்களை நம்பி ஈரான், சீனா போன்ற நாடுகளுடனான உறவை வெட்டி முறிக்காமல், யூரோ மதிப்பில் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும். டாலரின் பல்டிகளுக்கேற்ப பெட்ரோல் விலை ஏறி இறங்கும் பிரச்சனை தானாக முடிவுக்கு வரும்’ என்று அடித்துச் சொல்கிறார் ஜோதி சிவஞானம்.- ஆனந்த் செல்லையா,நன்றி : குமுதம் 6.6.2012

Leave a Reply

You must be logged in to post a comment.