நிதிநெருக்கடியில் இருந்து மீள்வதற்காக வெள்ளியாலான வில்லை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட வில்லாளி நிஷா ராணி தத்தாவுக்கு இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மக்கன் ஆணைப்படி ரூ.5 லட்சத்துக்கான கேட்பு வரைவோலையை அளித்தது.21 வயதான நிஷா ராணியின் திறமையைப் பாராட்டி அவருடைய தென் கொரிய பயிற்சியாளர் இந்த வெள்ளிவில்லை அவருக்கு பரிசாக அளித்தார். 2008ல் ஜார்க்கண்டில் நடந்த தெற்காசிய சாம்பியன் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் 2006 பாங்காக் கிராண்ட் பிரிக்ஸில் வெண்கலப்பதக்கமும், 2007 ஆகிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் சிறந்த வில்லாளி விருதும் நிஷாராணி பெற்றுள்ளார்.“என்னுடைய தந்தை ஒரு விவசாயி. ஆனாலும் அவரிடம் போதுமான நிலம் இல்லை. நிதி நெருக்கடியில் இருந்து நான் மீள்வதற்கு தேவையான உதவியையும் ஆதரவையும் மத்திய அரசு அளித்து வருகிறது.
என்னுடைய பயிற்சியைத் தொடர இது உதவும். ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் பத்மா கிராமத்தைச் சேர்ந்த நான் வறுமை காரணமாகஇரண்டாண்டுகளுக்கு வில்லாட்டத்தை விட்டு விட்டேன்” என்று அவர் கூறினார். “எனக்கு நிதி உதவி அளிக்குமாறு மத்திய அரசிடம் கேட்டேன். அது கிடைத்தால் கொல்கத்தா தேசிய விளையாட்டு கழகத்தில் நான் பயிற்சியைத் தொடர முடியும். என்னுடைய கனவுகளை பூர்த்தி செய்ய முடியும். இத்தொகையைக் கொண்டு நான் பயிற்சியைத் தொடங்க முடியும் என்று நம்புகிறேன்”என்றும் அவர் சொன்னார். “13 வயதில் வில்லை ஏந்தினேன். ஜார்க்கண்ட் அரசிடம் பலமுறை நிதி கேட்டுவிண்ணப்பித்தேன். ஆனால் பலனில்லை. என்னுடையஅவலநிலையை வெளியில் கூறிய ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றும் அவர் கூறினார்.

Leave A Reply