இணையதளத்தில் புகழ்பெற்று விளங்கும் இரண்டும் நிறுவனங்கள் தங்களுக்கு போட்டி போட்டுக் கொள்வது வழக்கமான ஒன்று தான். அதன் மூலம், இணையதளப் பயனாளர்களுக்கு கிடைக்கும் வசதிகள் ஏராளம்.தற்போது புதிய யுத்தமாக, உலகெங்கும் ஏராளமான பயனாளர்களைக் கொண்டுள்ள சமூக வலைதளமான ‘பேஸ்புக்’ தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பில் ஈடுபடவுள்ளது. இதற்காக அந்நிறுவனம் அதிதீவிரமாக இயங்கி வருகிறது. உலகப்புகழ்பெற்ற தேடுதல் நிறுவனமான கூகுள் சமீபத்தில் மொபைல் மற்றும் ஹார்டுவேர் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலாவை ரூ. 6,87,500 கோடிக்கு வாங்கியது. பின்னர், கூகுள் தனது சொந்த ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் முனைப்பில் உள்ளது. இதற்குப் போட்டியாக, அடுத்த ஆண்டிற்குள் தனது ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டுவர வேண்டும் என்று அதிதீவிரமாக பேஸ்புக் இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, ஐபோன் மற்றும் ஐபாட் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஊழியர்களை பேஸ்புக் நிறுவனம் வேலைக்கு அமர்த்தியுள்ளது. தற்போது அவர்களிடமிருந்து, ஸ்மார்ட் போன்களை உருவாக்குவது குறித்த நுணுக்கங்களை கேட்டு வருவதாக ஆப்பிள் நிறுவனத்திலிருந்து பிரிந்து பேஸ்புக்கில் வேலை செய்யும் ஊழியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஸ்மார்ட் போன் தயாரிப்பில் பேஸ்புக் இறங்கி தோல்வியுற்றது. இது மூன்றாவது முயற்சியாகும். கடந்த 2010ம் ஆண்டு பேஸ்புக் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இறங்கியது. அதில் ஏற்பட்ட சில சிக்கல்களின் காரணமாக அப்பணி தடைபட்டது. பிறகு பேஸ்புக், எச்டிசி எனும் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ‘பஃப்ஃபி’ எனும் பெயரில் ஸ்மார்ட் போனை தயாரிக்கப்போவதாக தகவல்கள் வந்தன. தற்போது, ஸ்மார்ட் போனை தயாரிக்கும் வகையில், இத்துறையில் முன் அனுபவம் பெற்ற பொறியாளர்களை ஒரு குழுவாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இதுகுறித்து பேஸ்புக் அதிகாரிகள் எவ்வித உறுதியும் அளிக்கவில்லை. இருப்பினும், தகவல் தொழில்நுட்பத்தின் அனைத்து துறைகளிலும் தாங்கள் இருக்க விரும்புவதாக பேஸ்புக் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.