லத்தீன் அமெரிக்க நாடுகளில் அன்னையர்களை பாதுகாப்பதில் சிறந்த நாடாக கியூபா விளங்குகிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. வளர்ந்த நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கூட பெற்ற தாயாரை காப்பகத்தில் சேர்ப்பதும், கண்டுகொள்ளாமல் விடுவதும் சாதாரணமான விஷயமாக மாறியிருக்கிறது. பல பெற்றோர்கள் தங்களது கடைசி காலத்தில் வாழ வழியின்றி தெருவில் நிற்கும் அவலமும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து வருகிறது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பல்வேறு தடைகளையும் மீறி வளர்ந்து வரும் கியூபா அன்னையர்களை அரவணைத்து பாதுகாப்பதில் முதல் நாடாக திகழ்கிறது என்று ‘சேவ் தி சில்ரன்’ என்ற அரசு சாரா நிறுவனம் செய்துள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் முக்கியமாக அன்னையர்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலை மற்றும் உடல் நலன் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதே போல் பிரசவத்தின் போது குழந்தைகளின் இறப்பு விகிதம் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் நடைபெற்ற ஆய்வில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அன்னையர்களை பாதுகாப்பதில் கியூபா சிறந்த நாடாக விளங்குகிறது என தெரியவந்துள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இதே பகுதியில் உள்ள நிகரகுவா 49 வது இடத்திலும், ஹோண்டுராஸ் 60 வது இடத்திலும் மற்றும் குவாதிமாலா 68 வது இடத்திலும் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. உலக அளவில் மொத்தம் 165 நாடுகளில் அன்னையர்களின் நிலை குறித்த ஆய்வை மேற்கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆப்பிரிக்க நாடுகளின் நிலை மிகவும் பின்தங்கியே இருக்கிறது. காரணம் இந்த நாடுகளில் தாய்மார்கள் மட்டுமல்ல குழந்தைகளும் வறுமையின் பிடியில் சிக்கியிருக்கின்றனர். இப்பகுதிகளில் வாழும் பெண்களின் ஆயுட்காலம் 56 ஆண்டுகள் என்ற நிலையில் இருக்கிறது. மேலும் 16ல் 1 குழந்தை பிறக்கும் போதே இறந்து விடுகிறது. மூன்றில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. ஐந்து சதவீதம் பெண்களே பிரசவத்தின் போது நவீன சாதனங்களை பயன்படுத்தும் வகையில் இருக்கின்றனர் என்று ‘சேவ் தி சில்ரன்’ என்ற அரசு சாரா நிறுவனம் செய்த ஆய்வறிக்கையை‘பெர்ஸ்னாலேட்டின்’என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.வளர்ந்த நாடுகளிலேயே 40 சதவிகிதத்திற்கும் குறைவான பெண்களே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கின்றனர்.
முறையாக தாய்ப்பால் கொடுத்தாலே ஆண்டு தோறும் இறக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளை காப்பாற்ற முடியும் என்று அர்ஜென்டினாவில் உள்ள டீலம் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள வறுமைநாடுகளில் தற்போது பின்பற்றப்படும் கொள்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும். அதன் மூலம் குழந்தைகளை பாதுகாத்திட முன்வர வேண்டும். இல்லையென்றால் இதே கொள்கை தொடர்ந்தால் அடுத்த 15 ஆண்டுகளில் 45 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்படுவர். இதன் காரணமாகவே பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்ற லண்டனை சார்ந்த அரசு சாரா நிறுவனம் செய்துள்ள தனது ஆய்வின் மூலம் எச்சரித்திருக்கிறது.

கியூபாவின் தகவல்தொழில் நுட்பங்களை தடுக்கும் அமெரிக்கா
கியூபா, அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடைகளை கடந்து பல்வேறு துறைகளில் பெரும் வளர்ச்சியடைந்து வருகிறது. இருந்த போதிலும் கியூபாவை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்க தொடர்ந்து கியூபாவிற்கு பல்வேறு தொல்லைகளை கொடுத்து வருகிறது. தற்போது கியூபாவில் இளைஞர்கள் தங்களது இளம் வயதிலேயே கணினி அறிவை வளர்த்துக் கொண்டு வருகின்றனர். இதனை மேம்படுத்தி தகவல் தொழில் நுட்பத்தில் பெரியளவில் வளர்ச்சியை எட்ட பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு இருக்கிறது. அதனை தடுத்து நிறுத்திட பல்வேறு வேலைகளில் அமெரிக்கா இறங்கியிருக்கிறது. குறிப்பாக கியூபாவின் தகவல் தொழில் நுட்பத்திற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி தடுத்து வருகிறது. ஜெனீவாவில் நடைபெற்ற உலக வர்த்தகக் கழகத்தின் கூட்டத்தில் கியூபாவின் தகவல் தொழில் நுட்பத்திற்கு அமெரிக்கா ஏற்படுத்தி வரும் தடைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் அமெரிக்கா உடனடியாக அந்த தடைகளை திரும்பப் பெற வேண்டும். அமெரிக்காவின் இந்த ஒரு தலைப்பட்சமான நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பத்தின் 15 வது ஆண்டு நிறைவு விழாவில் கியூபா தூதர் கார்லோஸ்பிடல் மார்டின் வலியுறுத்தினர். அமெரிக்கா கடந்த 50 வருடங்களாக கியூபா உலக சந்தையில் பொருட்களை வாங்கவும், விற்கவும், சேவையை தொடரவும் தடை விதித்து வந்திருக்கிறது. அதே நேரத்தில் உலக பொருளாதாரத்துடன் இணைக்கும் விதமாக இருக்கும் மின்னணு சந்தையில் கியூபா நுழைய அனுமதி மறுத்து வருவதையும் சுட்டிக்காட்டி பேசினார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டம் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு மாறானது மட்டுமல்ல, ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகும் என்று சுட்டிக்காட்டினார். மேலும் பலதரப்பு வர்த்தக கொள்கைக்கு கேடு விளைவிக்கும் விதமாக ஒரு சில தொழில்மயமான நாடுகளை மட்டும் அமெரிக்கா ஊக்குவித்து வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.கியூபாவின் குடிமக்கள் மீது அமெரிக்கா வெளிப்படையாக மிகப்பெரிய அளவில் வர்த்தகம் மற்றும் நிதி சார்ந்த தடைகளை விதித்திருக்கிறது. இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். இதனால் 2010ம் ஆண்டில் மட்டும் இன்றைய டாலர் மதிப்பு அடிப்படையில் 975 பில்லியன் டாலர் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலின் துணை அமைப்பான வளர்ச்சி உரிமைக்கான பணிக்குழுவின் 13 வது கூட்டத்தில் பங்கேற்று பேசிய கியூபாவின் பிரதிநிதி ஜூவான் அண்டோனியோ குவிண்டனிலா குற்றம்சாட்டினார்.

Leave A Reply

%d bloggers like this: